ஓபேத் ஏதோமின் வீடு!

“கர்த்தருடைய பெட்டி, கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்” (2 சாமு. 6:11).

கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியினால், இஸ்ரவேல் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அந்த உடன்படிக்கை பெட்டியோடு தேவ பிரசன்னம் இருந்தது. அவர்கள் யுத்தத்திற்குச் செல்லும்போதெல்லாம், ஆசாரியர்கள் மூலம் அந்த உடன்படிக்கை பெட்டியை சுமந்து செல்லுவார்கள். ஆனால் சவுல் ராஜாவாக ஆண்ட நாற்பது வருடங்களும், உடன்படிக்கை பெட்டியைக் குறித்து, அவர் அக்கறை கொள்ளவேயில்லை. ஆனால், தாவீது அதைக் கனம்பண்ணி, தாவீதின் நகரத்திற்குள்ளே கொண்டு வந்து, ஆராதனை ஸ்தலத்திலே வைக்கும்படி மிகவும் பிரியப்பட்டார்.

ஆனால், அந்தப் பெட்டியை எப்படி கொண்டு வரவேண்டும் என்கிற வழிமுறைகளை தாவீது அறியவில்லை. பிரதிஷ்டை செய்யப்பட்ட கர்த்தருடைய ஊழியக்காரரைத் தவிர, வேறு யாரும் அதை சுமக்கக்கூடாது. தாவீதோ, மாட்டு வண்டியிலே சுமந்து கொண்டு வந்தபடியால், நாகோனின் களம் வந்தபோது, மாடுகள் மிரண்டன. வண்டியிலிருந்த உடன்படிக்கை பெட்டி விழுந்துவிடும்போல இருந்தது. “ஊசா” அந்தப் பெட்டியை பதறி தொட்டபோது, மரணமடைந்தார். அந்த மரணத்தைப் பார்த்ததும், தாவீது பயந்து விட்டார். “ஒரு சின்னக் காரியத்திற்கு இவ்வளவு பெரிய அடி விழுந்ததே” என்று எண்ணினார். ஓபேத் ஏதோம், தன்னுடைய வீட்டிலே, அந்தப் பெட்டியை அன்போடு ஏற்றுக்கொண்டான். கர்த்தர் அவனையும், வீட்டாரையும் ஆசீர்வதித்தார். அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டு காலத்தில், உடன்படிக்கை பெட்டி இருந்ததுபோல, இன்று வேத புத்தகம் இருக்கிறது. அதை நேசித்து, கனப்படுத்தி வாசிப்பீர்களானால், அது உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும். வேதம் என்ற ஒரு புத்தகத்துக்குள், 66 புத்தகங்கள் அடங்கியிருக்கின்றன. இது பரிசுத்த ஆவியானவர் அருளிச்செய்த உடன்படிக்கையின் புத்தகம். பழைய ஏற்பாடு என்பது, ஆபிரகாமோடு கர்த்தர் செய்த உடன்படிக்கை ஆகும். புதிய ஏற்பாடு, கிறிஸ்துவினுடைய மரணம், உயிர்த்தெழுதல், அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையாகும். நீங்கள் கர்த்தரோடு உடன்படிக்கை செய்திருக்கிறீர்களா? வேத புத்தகமாகிய உடன்படிக்கையைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? பழைய ஏற்பாட்டிலுள்ள உடன்படிக்கை பெட்டிக்குள் மூன்று பொருட்கள் இருந்தன. முதலாவது, ஒரு பாத்திரத்திலே மன்னா. இரண்டாவது, ஆரோனுடைய துளிர்த்தக் கோல். மூன்றாவது, தேவன் எழுதின பத்துக் கற்பனை பலகை. இந்த மூன்றுக்கும் ஆவிக்குரிய அர்த்தங்கள் உண்டு. இந்த மூன்றும் என்றென்றும் நினைவுகூர வேண்டிய பொருட்கள்.

எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர், நாற்பது வருடங்கள் வனாந்தரத்திலே நடந்தபோது, கர்த்தர் ஒவ்வொருநாளும் அவர்களுக்கு மன்னாவை கொடுத்து போஷித்தார். அது வானத்திலிருந்து இறங்கின அப்பம். ஜீவ அப்பமாகிய கிறிஸ்து வுக்கும், வேத வசனத்திற்கும் அடையாளமானது. தேவனுடைய பிள்ளைகளே, உங்களுடைய தாழ்விலே நினைத்து, பரலோக மன்னாவினால், போஷித்தவரை மறந்துவிடாதிருங்கள். வேதத்தை நேசித்து அவரைக் கனப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டை யும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது” (2 சாமு. 6:12).