வானத்தின் ஆசீர்வாதங்கள்!

“கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்” (உபா. 28:12).

உலக ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், வானத்துக்குரிய ஆசீர்வாதங்களும், உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்களும், நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களும் மகா மேன்மையானவைகள். “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள், உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும், நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).

“வானம்” ஒரு பண்டகசாலை போல இருக்கிறது. அது ஒரு பொக்கிஷ சாலை. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். எந்த பகுதியிலிருந்து ஆண்டவர், என்ன ஆசீர்வாதங்களை உங்களுக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமென்று விரும்பு கிறாரோ, அதை அவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு திறந்து தர வல்லமை யுள்ளவராயிருக்கிறார். சாலொமோன், பரலோக தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டபோது, கர்த்தர் ஞானத்தை மட்டுமல்ல, சாலொமோன் கேட்டிராத ஐசுவரியத்தையும், மகிமையையும்கூட கொடுத்தார். கர்த்தர் மனதுருக்கமுள்ளவர். கிருபை நிறைந்தவர். அவர் ஒருபோதும் அளந்து கொடுக்கிறவர் அல்ல. அள்ளிக் கொடுக்கிறவர். அவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார்.

அவரை ஒவ்வொரு நாளும், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்கிறோம். “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர் களுக்கு இரங்குகிறார்” (சங். 103:13). கர்த்தருடைய வாசஸ்தலம், வானாதி வானங்களுக்கு மேலே, பரலோகத்திலிருக் கிறது (1 இராஜா. 8:27). “தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்” (சங். 102:20). ஒரு முறை, ஜெபத்திற்காக ஒரு சகோதரி வந்திருந்தார்கள். அவர்களுடைய கணவன் இரவும், பகலும் குடிக்கிற பயங்கரமான குடிகாரன். அவர்களுக்கு நிறைய பிள்ளைகள்.

வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கர்த்தரோ, அவர்கள் மேல் மிகுந்த மனதுருக்கத்தோடு, “மகளே, பயப்படாதே. நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, ஆச்சரியப்படுகிற விதத்திலே உன்னை ஆசீர்வதிப்பேன்” என்று பேசினார். இந்த சகோதரி நம்புவதற்கு ஏதுவாயில்லாமலிருந்தும், அந்த வார்த்தைகளை விசுவாசித்தார்கள். “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக். 1:37) என்று விசுவாச அறிக்கை செய்தார்கள். என்ன நடந்தது தெரியுமா? பல வருடங்களுக்கு முன்பு, அவர்களுக்கு பெண் சிநேகிதியாயிருந்த இங்கிலாந்தி லுள்ள ஒரு வயதான மூதாட்டி மரிக்கும்போது, தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் இவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு, மரித்துப் போனாள். இதன் விளைவாக பல கோடி ரூபாய்கள் அவர்களுக்குக் கிடைத்தது. வறுமை மாறினது. மகா செழுமை உண்டானது. தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசியுங்கள். அவர் ஒரே நிமிடத்தில் சூழ்நிலை களை மாற்றி, அற்புதத்தை செய்யக்கூடியவர். உங்களுக்கு ஒரு புதிய வழியையும், வாசஸ்தலத்தையும் திறக்கக் கூடியவர்.

நினைவிற்கு:- “உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று. அவர் உனக்குத் துணையாயிருப்பார். சர்வ வல்லவராலே அப்படியாயிற்று. அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், உன்னை ஆசீர்வதிப்பார்” (ஆதி. 49:25).