கர்த்தருக்குச் செவிகொடுங்கள்!

“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (உபா. 28:2).

புது வீடு பிரதிஷ்டைக்கானாலும் சரி, திருமண வைபவத்திற்கானாலும் சரி. பொதுவாக ஊழியக்காரர்கள், உபா. 28-ம் அதிகாரம் 1-14 வரை உள்ள வேத வசனங்களை வாசித்து, ஆசீர்வதிப்பார்கள். அவ்வளவும் மிக வல்லமையான வாக்குத்தத்த வசனங்கள். ஆசீர்வாதங்களைக் கொண்டு வரக்கூடியவைகள். உண்மையில் இந்த ஆசீர்வாதங்கள் யாருக்கு வரும்? கர்த்தருடைய சத்தத்துக்குக் கவனமாய் செவிகொடுக்கிறவர்களுக்கே வந்து, அவர்கள்மேல் பலிக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு செவிகொடுக்கும்போதும், விசுவாசிகள் ஊழியர் களுக்கு செவிகொடுக்கும்போதும், வரும் ஆசீர்வாதங்களுண்டு. வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து உண்மையும், உத்தமமுமாய் நிறைவேற்றும்போது, வரும் ஆசீர்வாதங்களுண்டு.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவருமே கர்த்தருக்குச் செவிகொடுத்தேயாக வேண்டும். பெருமையோடும், அகங்காரத்தோடும் பார்வோன் சொன்னான், “நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு, அவர் யார்? நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்” (யாத். 5:2). கர்த்தருக்கு செவிகொடுக்கப் பிரியமில்லாத பார்வோனையும், அவனுடைய சேனையையும், கர்த்தர் சிவந்த சமுத்திரத்திலே தள்ளி, அமிழ்த்த வேண்டியது வந்தது. அப்படியே இன்றைக்கும் அநேகர், கர்த்தருக்கு செவிகொடுக்கப் பிரியமில்லாமல், மனம்போல வாழுகிறார்கள். பலவித துணிகரமான பாவங்களுக்குள் சிக்கிக் குடித்து, கூத்தாடி விபச்சாரத்துக்குள் இறங்கி, தங்களுடைய சரீரத்தை பல வேதனை களினால் உருவக் குத்திக்கொள்ளுகிறார்கள். முடிவிலே பாதாளத்தில், நித்திய அக்கினிக்கடலில் வேதனையடைகிறார்கள். இந்த நிலைமை ஒருவருக்கும் வர வேண்டாம். உங்களுடைய மனச்சாட்சி, தேவனுடைய குரலாயிருக்கிறது. மனச்சாட்சியை மீறுவது பாவம்.

வேதத்துக்கு செவிகொடுக்காதபடி, உள்ளத்தையும், காதுகளையும் அடைத்துக்கொள்வது பாவம். முடிவில் இவர்கள் “என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம் பண்ணினவர்களுக்கு, என் செவியைச் சாயாமலும் போனேனே!” (நீதி. 5:13) என்று சொல்லி நித்திய நித்தியமாய் வருந்துவார்கள். “பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள். என் வாயின் வசனங் களை விட்டு நீங்காதிருங்கள்” (நீதி. 5:7; 7:24) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை, தம்முடைய சொந்த ஜனங்களாகத் தெரிந்துகொண்ட போதிலும்கூட, அவர்களோ, கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வில்லை. கர்த்தருடைய உள்ளம் உடைந்தது. “ஆ, என் ஜனம் எனக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்” (சங். 81:13) என்று அங்கலாய்த்தார்.

“என் ஜனமோ, என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை. இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை” (சங். 81:11) என்று புலம்பினார். தேவபிள்ளைகளே, சிறிய சாமுவேலைப்போல, “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லி கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடுப்பீர்களா? நீங்கள் கீழாகாமல் மேலாவீர்கள். வாலாகாமல் தலையாவீர்கள் (உபா. 28:14).

நினைவிற்கு:- “உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத். 23:25)