ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்!

“நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரமடங்கு அதிகமாகும்படி, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே, உங்களை ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11).

“ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்” அன்றைக்கு ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலருக்கு கிடைத்தது. புதிய ஏற்பாட்டிலே, இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகளாய் இருக்கிற நீங்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலராக, கிறிஸ்துவின் சந்ததியாக இருக்கிறீர்கள். ஆகவே, ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உங்களுக்குண்டு.

“இஸ்ரவேல்” என்ற வார்த்தைக்கு, “மனுஷனோடும், தேவனோடும் போராடி மேற்கொள்ளுகிறவன்” என்பது அர்த்தம். “இஸ்ரவேல்” என்று சொன்னால், “தேவனுடைய பிரபு, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்பது அர்த்தம். யாக்கோபு தன் வாழ்நாளெல்லாம் மனுஷனோடும், கர்த்தரோடும் போராடி உலகத்திற்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அவரது ஊக்கமான ஜெபம், எத்தனாயிருந்த யாக்கோபை “தேவபிரபு” என்று அர்த்தங்கொள்ளும் “இஸ்ரவேலாய்” மாற்றிற்று. அன்று முதல் யாக்கோபு, ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்திற்கு சுதந்தரவாளியானார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கும் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் வேண்டுமா? கருத்தோடு ஜெபியுங்கள். விண்ணப்பங்களோடும், மன்றாட்டுகளோடும் கர்த்தரிடத்தில் போராடி ஜெபியுங்கள். மட்டுமல்ல, பரிசுத்த ஆவிக்குள், மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல், உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு ஜெபியுங்கள் (யூதா 1:20). அந்தரங்கத்தைப் பார்க்கிற பிதாவாகிய தேவன், ஆயிரம் மடங்கு வெளியரங்கமாய் உங்களுக்குப் பலனை தருவார்.

கர்த்தரிடத்திலே ஜெபிக்கும்போது, இயேசுவின் நாமத்தை முன் வையுங்கள். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் உங்களுக்கு செய்வேன் (யோவா. 14:14) என்று அவர் வாக்குப் பண்ணியிருக்கிறாரே. “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவா. 16:24).

சிலர் ஜெபிக்கும்போது, ஊக்கமாய் ஜெபிப்பதில்லை. அதிலே விசுவாசமும் இருப்பதில்லை, விடாப்பிடியும் இருப்பதில்லை, போராட்டமும் இருப்பதில்லை. யாக்கோபைப் போல, ஜெபத்திலே போராட கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கலாம். உங்களுடைய வீட்டிலே கடன் பிரச்சனைகளும், பற்றாக்குறைகளும், சத்துருவினுடைய போராட்டங்களும் வரும்போது, குடும்பமாய் உபவாசித்து ஜெபியுங்கள். வெற்றி கிடைக்கும் வரையிலும், ஜெபத்தை நிறுத்தாதிருங்கள். ஜெபத்தைக் கேட்கிறவர் நிச்சயமாகவே உங்களுக்குப் பலனளிப்பார். அந்தப் பலன் சாதாரணமானதல்ல. ஆயிரம் மடங்கு மேன்மையானதாக இருகும்.

யாக்கோபுக்கு பிறகு, எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின்பு வந்த, ஓசியா யாக்கோபின் போராட்ட ஜெபத்தைக் குறித்து எழுதினார். “அவன் (யாக்கோபு) தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்” (ஓசி. 12:3,4). தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமா வினாலே, சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடுங்கள் (பிலி. 1:27).

நினைவிற்கு:- “நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்” (கொலோ. 1:29).