ஆசீர்வாதத்தின் வழி!

“இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” (எண். 24:1).

கர்த்தர் எப்பொழுதுமே உங்களை ஆசீர்வதிக்க சித்தங்கொண்டிருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருக்கிறீர்கள். உன்னதமான தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவரை “அப்பா” என்று அழைக்கும்படி, புத்திர சுவிகார ஆவியை உடையவர்களாயிருக்கிறீர்கள். உங்களை அவர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்.

வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தும், உங்களுடைய ஆசீர்வாதத்துக் காகவே எழுதப்பட்டிருக்கின்றன. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்துக்கு தேவையான அத்தனை ஆசீர்வாதங்களும், முழுமையாக வேத புத்தகத்தில் உண்டு. அவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும், கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றும், “ஆமென்” என்றும் இருக்கின்றன. உங்களுடைய வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளில் பயமும், திகிலும், கலக்கமும், குழப்பமும், ஏமாற்றமும், அதிருப்தி யும் ஏற்படும்போது, நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி, விசுவாச அறிக்கை செய்து, விடுதலையைப் பெற்றுகொள்ள வேண்டும். நீங்கள் சாபத்தோடும், வியாதியோடும், பிரச்சனைகளோடும் வாழ்வது, கர்த்தருக்குப் பிரியமானதல்ல. அநேக குடும்பங்களில் தலைமுறை, தலைமுறையாக வரும் சாபங்கள் உண்டு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சாபங்களை நீக்கி, நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படி பூமிக்கு இறங்கி வந்து, சிலுவையிலே அந்த சாபங்களை முறித்து, உங்களை ஆசீர்வதிக்க சித்தமானார். “உன் தேவனாகிய கர்த்தர், உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர், அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்” (உபா. 23:5). இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். “என் சாபத்தையெல்லாம் சிலுவை யிலே சுமந்து தீர்த்துவிட்டார். என்னை தம்முடைய மகனாக, மகளாகத் தெரிந்து கொண்டார். ஆகவே, என் குடும்பத்தில், இன்றுமுதல் ஆசீர்வாதம் சுரப்பதாக” என்று ஜெபியுங்கள்.

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலா. 3:13). இனி உங்களுடைய குடும்பத்தில் ஒரு சாபமுமிராது (வெளி. 22:3). இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்து, சாபங்களை முறித்து, பின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, தம்முடைய சீஷர்களை பெத்தானியா வரைக்கும் அழைத்துக் கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார் (லூக். 24:50).

இன்றைக்கும் அவர் தம்முடைய கரங்களை உயர்த்தி, உங்களை ஆசீர்வதிக்கிறார். நீங்கள் நிச்சயமாகவே ஆசீர்வாதமா யிருப்பீர்கள். நீங்கள் வேதத்தை தியானிக்கும்போது, கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கிற உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களை அறிந்து கொள்ளுங்கள். ‘ஆழ்கடலின் ஆழத்திலுள்ள முத்துக் களை, முத்துக் குளிப்பவர்கள் வெளியே கொண்டு வருவதுபோல’ வேத புத்தகத்தில் உங்களுக்கு அளித்திருக்கிற ஆசீர்வாதங்களை வெளியே கொண்டு வந்து, விசுவாச அறிக்கை செய்து, சுதந்தரித்துக் கொள்ளுங்கள். அந்த ஆசீர்வாதங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் உரியவைகள். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்துக்கு பிரயோஜனமானவைகள்.

நினைவிற்கு:- “இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2:19).