வேத வசனங்களினால் ஆசீர்வாதம்!

“என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (யாத். 20:6).

வேத வசனங்களை வாசிக்கிறதும் பாக்கியம், வாசிக்கிறதைக் கேட்கிறதும் பாக்கியம், எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறதும் பாக்கியம் (வெளி. 1:3). வேதாகமம் நமக்குப் பாக்கியமான வாழ்க்கையை வாக்களிக்கிறது. யோசுவாவுக்கு கர்த்தர் சொல்லிக்கொடுத்தார். “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப் பாயாக, அப்பொழுது, நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்” (யோசு. 1:8).

டி.எல்.மூடி பக்தன் சொன்னார், “நீங்கள் வாலிப வயதில், வேதத்தைத் தூக்கிச் சுமந்தால் வயதான நாட்களிலே, வேதம் உங்களை தூக்கிச் சுமக்கும். வேதம் உங்களைப் பாவத்துக்குத் தூரப்படுத்தும். நீங்கள் வேதத்தின்படி நடவாவிட்டால், பாவம் உங்களை வேதத்துக்குத் தூரப்படுத்தும்.” உலகத்தை அசைத்த தேவனுடைய மனுஷனாகிய பில்லிகிரகாம் சொன்னார், “இந்த உலகத்தில் ஒரு பாக்கியமான வாழ்வு வாழும்படி, கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அதன் காரணம் இந்த வேத புத்தகமே” என்றார். அவர் வேதாகமத்தைத் திரும்பத் திரும்ப, ஆராய்ந்து படித்தவர். நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசங்கங்களை, வேத வசனத்திலிருந்து ஆயத்தம் செய்தவர். இன்று தம் முதிர்வயதில், வாலிபருக்கு தமது பாக்கியமான வாழ்வின் இரகசியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்களைப் பாக்கியசாலிகளாய் மாத்திரமல்ல, நற்குணசாலிகளாகவும் மாற்றும். “பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந் தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும், நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப். 17:11). தேவபிள்ளைகளே, நீங்களும் நற்குணசாலி என்று நற்சாட்சி பெற வேண்டாமா? வேதத்தைத் தினந்தோறும் ஆராய்ந்து பாருங்கள்.

வேதத்தை வாசிப்பதினால், உங்களுக்குக் கிடைக்கும் இன்னொரு மிகப் பெரிய ஆசீர்வாதம். கனிகொடுக்கும் வாழ்க்கையாகும். கனி கொடுத்த வாழ்க்கை வாழ்ந்த தாவீது ராஜா சொல்லுகிறார்: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).

அடுத்ததாக, வேத வசனங்களின் பாக்கியம் என்ன? ஆம், அது பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங். 119:130). “கர்த்தருடைய வேதம், குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது” (சங். 19:7). வேத வசனத்தின்படி நடக்கிறவர்கள், பேதையராயிருந்தாலும், திசைகெட்டுப் போவதில்லை (ஏசா. 35:8).

நினைவிற்கு:- “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” (யோவா. 5:24).