ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்கள்!

“அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (ஆதி. 49:25).

“ஆழத்தின் ஆசீர்வாதங்கள்” அனைத்தையும் பெற்று அனுபவித்தவர் யோசேப்பு. யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்கள் இருந்தாலும், அவர்கள் எல்லாரைப் பார்க்கிலும், யோசேப்புக்கு, யாக்கோபு அதிகமான ஆசீர்வாதத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். யோசேப்பை ஆசீர்வதிக்கும் போது, யாக்கோபின் உள்ளம் உருகி, கண்களிலே கண்ணீர் தாரை தாரையாய் வழிந்திருக்கும்.

காரணம் என்ன? யோசேப்பை முழுபகையாய் பகைத்த அவருடைய பத்து சகோதரர்களும், அவரை துன்புறுத்தி, குழியில் போட்டார்கள். ஒரு ஆட்டை அடித்து, அதிலே யோசேப்பின் பலவருண அங்கியைத் தோய்த்து, தகப்பனிடத்தில் அனுப்பி, “உம்முடைய குமாரன் அங்கிதானோ பாரும்” என்று சொன்னார்கள். யாக்கோபு அதைப் பார்த்தபோது, “ஐயோ! என் அருமையான மகனை, கொடிய மிருகம் தாக்கி பீறிட்டு போட்டதோ,” என்று கதறி அழுதார். எத்தனையோ ஆண்டுகள் ஆறுதல் பெறமுடியாமல், மகனை நினைத்து, நினைத்துக் கலங்கிப்போய் இருந்திருப்பார். மீண்டும் யோசேப்பை சந்திக்க முடியும், என்று யாக்கோபு எண்ணவில்லை.

ஆனால், ஒருநாள், “யோசேப்பு உயிரோடிருக்கிறான். எகிப்து தேசம் முழுமைக் கும் அதிகாரியாய் இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, என் மகன் உயிரோடிருக்கிறானா? அவனை சீக்கிரமாய் சென்று பார்ப்பேன் என்று அவருடைய உள்ளம் மகிழ்ந்தது. மரித்த மகனை உயிரோடு பெறுவதுபோல, யோசேப்பை கண்குளிரக் கண்டார். இப்பொழுது வயது முதிர்ந்த நிலைமையில், மரணத்திற்கு முன்னால், யோசேப்பை ஆசீர்வதிக்கலானார்.

“யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள், யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று. அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும், உன்னை ஆசீர்வதிப்பார்” (ஆதி. 49:22-25) என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

இன்றைக்கு யாக்கோபிலும் பெரியவர், உங்களை ஆசீர்வதிக்கும்படி, உங்கள் அருகில் இருக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்கள் ஆழத்திற்குரியது மட்டுமல்ல, உன்னதத்திற்குரியதாகும். அவர் கிறிஸ்துவுக்குள், உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே. 1:3).

ஆகவே பக்தன் மோசே ஜெபிக்கும்போது, “தேவரீர் எங்களைச் சிறுமைப் படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய், எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று ஜெபித்தார் (சங். 90:15). தேவபிள்ளைகளே, உங்களுடைய துயரத்தின் நாட்கள் முடிந்துபோனது. நீங்கள் வேதனை அனுபவித்த வருடங்களை கர்த்தர் மாற்றி, மனஆறுதலின் நாட்களையும், சமாதானத்தின் நாட்களையும், நிச்சயமாகவே உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகக் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்” (சங். 33:7).