எகிப்தியனின் வீடு!

“கர்த்தர் யோசேப்பினிமித்தம், அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும், கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது” (ஆதி. 39:5).

எகிப்தியனாகிய போத்திபார், ஒரு புறஜாதியான். கர்த்தரை அறியாதவன். அவன் விக்கிரகாராதனைக்காரனாக இருந்தபோதிலும், யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் அவனுடைய வீட்டை ஆசீர்வதித்தார். மட்டுமல்ல, அவனுடைய வீட்டிலும், வெளியிலும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும், கர்த்தர் ஆசீர்வதித்தார். இவ்வளவுக்கும், யோசேப்பை போத்திபார் ஒரு அடிமையாக விலை கொடுத்து வாங்கி வந்தார். ஆனால், யோசேப்போடு, கர்த்தரும் விலைமதிக்க முடியாதவராக அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தார். யோசேப்பு தனியாக இல்லை. கர்த்தர் அவனோடிருக்கிறார் என்று கண்ட போத்திபார், தன்னுடைய முழு வீட்டையும் யோசேப்பினுடைய கையிலே ஒப்படைத்தான்.

அதைவிடவும், கர்த்தர் யோசேப்பிடம் அதிகமாக இருந்தார். “விசேஷித்த ஆவி அவனில் தங்கியிருக்கிறது. ஞான வரம் அவனிலே செயல்படுகிறது” என்று கண்ட ராஜாவாகிய பார்வோன், எகிப்து தேசத்தையே யோசேப்பிடம் அர்ப்பணித்து விட்டார். கர்த்தரோடு, ஆவியானவரும் அங்கே தங்கியிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முடிவு என்ன? எகிப்து தேசம் ஆசீர்வதிக்கப்பட்டது. செழுமையின் வருஷங்களை, மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள். எதிர்கொண்டு வந்த, பஞ்சத்திற்கு தப்பினார்கள். “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவனை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும், உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவா. 4:4). காரணம், எகிப்தியர் யோசேப்பை, தேவ மனுஷனாய் கண்டார்கள். யோசேப்போடு இருக்கிறவரை, பெரியவராய் கண்டார்கள். ஆகவே, தன்னுடைய வீட்டையும், தேசத்தையும், யோசேப்பின் கையிலே அர்ப்பணித்தார்கள். நீங்கள் எப்பொழுதும் கர்த்தரை பெரியவராய், சர்வவல்லவராய், மகிமையின் ராஜாவாய் காணுங்கள். அவருடைய கரத்திலே, உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.

அப்.பவுல், தான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிந்து, அவருடைய கரத்திலே தன்னை அர்ப்பணித்துவிட்டார். தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” என்றார் (2 தீமோ. 1:12). ஆனால், அநேகர் கர்த்தரை அறிந்திருந்தாலும், தங்களை அர்ப்பணிப்பதில்லை.

“நயாகரா” நீர்வீழ்ச்சி, உலகில் உயரமானது. ஆபத்தானது. வீர சாகசம் செய்கிற ஒருவர், இரண்டு மலைகளைக் கம்பியால் இணைத்து, அதில் நடந்து, நீர்வீழ்ச்சியை கடந்தார். ஜனங்கள் கரம் தட்டி, டாலர்களை வீசினார்கள். அந்த வீரர் உற்சாகத்துடன் திரும்பவும் கடந்து வருவேன். யாரேனும் என் தோளில் அமருங்கள் என்றார். யாரும் முன்வரவில்லை. காரணம், அவர்கள் கண்டு ரசித்தனர். ஆனால் அர்ப்பணிக்க பயம். இப்படித்தான் இன்றைக்கு, பெரிய கூட்டம் கர்த்தரை ஆராதிக்கிறார்கள். காணிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், முழு நேர ஊழியத்திற்கு வரவோ, வட இந்தியாவிற்கு மிஷனெரியாக அர்ப்பணிக்கவோ, முன் வருவதில்லை. தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கென்று உங்களை அர்ப்பணிப்பீர்களா?

நினைவிற்கு:- “யோசேப்பைக் குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப் படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக” (உபா. 33:13).