கீழ்ப்படிதலினாலே ஆசீர்வாதமும், பெருகுதலும்!

“ஆபிரகாம் என் சோல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்” (ஆதி. 26:4).

ஆபிரகாம் எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனைப் பிரியப்படுத்தி நடந்தபடியால், ஆபிரகாமுக்கு வந்த ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. முதலாவது, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, தன் சோந்த தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, கர்த்தர் காண்பித்த தேசத்திற்குப் போனார் (ஆதி.12:1).

எந்த தேசத்திற்கு கர்த்தர் கொண்டு போகிறார்? என்று தெரியவில்லை. அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள்? என்றும் தெரியவில்லை. அங்கே எப்படி? ஜீவனம் பண்ணுவோம், ஆடு மாடு மேப்பதற்கு புல்வெளிகள் உண்டா? என்று ஒன்றும் தெரியாமல் இருந்தபோதும், விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் கர்த்தரில் சார்ந்து கொண்டு புறப்பட்டுப்போனார். அதனால் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொண்டார்.

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமா இருப்பா. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி.12:2,3) என்பது ஆபிரகாமுக்கு மட்டுமல்ல, அவருடைய விசுவாச சந்ததியாகிய, உங்களுக்கும் கூட கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்லவா!

ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஆகாரையும் இஸ்மவேலையும் அனுப்பிவிட்டார். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஈசாக்கை பலிபீடத்தின்மேல் கிடத்தினார். அவருடைய வாழ்க்கையின் குறிக்கோள் எல்லாம், “முதலாவது கர்த்தரும் அவருடைய வார்த்தைகளும்” என்பதாகவே இருந்தது. ஆபிரகாம், ஒருநாளும் கர்த்தருடைய வார்த்தைகளை சந்தேகப்பட்டதில்லை. கர்த்தர் சோன்னதைக் கேட்டு முறுமுறுத்ததில்லை. எதிர்த்துப் பேசினதில்லை. நூற்றுக்கு நூறு அவர் கீழ்ப்படிந்தார். ஆகையால், “கர்த்தர் ஆபிரகாமிடம் உன்னை மிகவும் திரளாப் பெருகப் பண்ணுவேன்” என்றார் (ஆதி.17:2). “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்” என்று சோல்லி கர்த்தர் ஆசீர்வதித்தார் (ஆதி. 13:16). அப்படியே ஈசாக்கையும் (ஆதி.26:24), யாக்கோபையும் (ஆதி.35:11) பெருகும்படி ஆசீர்வதித்தார். காரணம் அவர் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்தார். நீங்களும், கீழ்ப்படியுங்கள். ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்து உங்களுக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுக்க சித்தமானபோது, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாக் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:7,8).

நினைவிற்கு:- “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி.2:9-11).