கோடாகோடி!

“ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்” (ஆதி. 24:60).

ரெபெக்காள், ஈசாக்குக்கு மணவாட்டியாகப் போகிறாள். அந்த ரெபெக்காளை அவளுடைய குடும்பத்தார் வாழ்த்தி, ஆசீர்வதிக்கும்போது, இரண்டு மடங்கு, ஐந்து மடங்கு, பத்து மடங்கு அல்ல, “கோடான கோடி மடங்கு பெருகுவாயாக” என்று சொல்லி ஆசீர்வதித்தார்கள்.

அப்படியானால், கர்த்தருடைய மணவாட்டியாய் இருக்கிற, புதிய ஏற்பாட்டு சபைக்கு, எவ்வளவு ஆசீர்வாதம் வரும்! அப். பவுல், “உங்களை கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு கற்புள்ள கன்னிகை யாக ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்றார் (2 கொரி. 11:2).

ஆகவே, நீங்கள் தேவசமுகத்திலே கறைதிரையற்ற, மாசற்ற மணவாட்டியாக விளங்க வேண்டும். “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” (வெளி. 19:7). புதிய ஏற்பாட்டிலே, அப். பவுல், ரெபெக்காளைப் பற்றி எழுதினார். “ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி யிருக்கிறபடியே, அந்த சந்ததியின் மூலம், ஜனங்கள் கோடான கோடியாய் பெருகினார்கள்” (ரோம. 9:10,11).

இன்றைக்கு கிறிஸ்தவர்கள், உலகம் முழுவதிலும் கோடா கோடியாக பெருகி இருக்கிறார்கள். அதில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூட்டத்தார், கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பார்கள். ஆகவே புதிய எருசலேமைப்போல உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது (வெளி. 21:2).

சபையானது, கிறிஸ்துவின் சுயரத்தத்தினாலே சம்பாதிக்கப்பட்டது (அப். 20:28). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலே உறுதியாக்கப்பட்டது. பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு இன்று வரைக்கும், சபை வளர்ந்து, பெருகிக்கொண்டே வருகிறது. பேதுருவின் முதல் பிரசங்கத்திலே, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு சபையிலே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதன்பின்பு, ஐயாயிரம் பேர், என்று திரளான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். “இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 2:47).

நீங்கள் பரலோகத்திலே, ஒளிமயமான அந்த மகிமையின் தேசத்திலே நிற்கும் போது, ஒன்றிரண்டு பேராக அல்ல, கோடானகோடி மக்களாய் நிற்பீர்கள். சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு, திரள் திரளான ஜனங்கள் நிற்பார்கள். “திரளான ஜனக்கூட்டம் பரலோகத்திலிருந்து மகிழ்ச்சியோடு ஆராதிக்கிற ஆரவாரத்தைக் கேட்டேன்” என்று அப். யோவான் எழுதுகிறார் (வெளி. 19:1). தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. வருகையை குறித்த எல்லா அடையாளங்களும், உலகமெங்கும் காணப்படுகின்றன. வருகையைக் குறித்த எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டன. மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை முகம் முகமாய் சந்திக்க, ஆயத்தப்படுங்கள்.

நினைவிற்கு:- “அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது. ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள். கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” (தானி. 7:10).