பல மடங்கு!

“அவர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங் களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்” (ஆதி. 15:5).

கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறவர். சிருஷ்டிப்பின் வேலையை கர்த்தர் நிறை வேற்றி முடித்தவுடனே, அவர் செய்த முதல் காரியம், ஆதாம், ஏவாளை ஆசீர்வதித்தது தான். அந்த ஆசீர்வாதத்தின் பலனாக இன்றைக்கு உலக ஜனத்தொகை 700 கோடியை தாண்டியிருக்கிறது. ஒரு ஜோடி தம்பதியிலிருந்து, இன்று உலகில் 300 கோடி தம்பதிகள் இருக்கிறார்கள். எத்தனை மடங்காய் கர்த்தர் ஆசீர்வதித்தார் பாருங்கள்! இன்றைக்கு நீங்கள், கர்த்தருடைய ஜனங்களாய், அவருடைய சுதந்தரவாளிகளாய் இருக்கிறீர்கள். மனதுருகி, உங்களை ஆசீர்வதிக்காமல் இருப்பாரோ? அவர் உங்கள் மேல் வைத்த தயவு, காருண்யம் பெரியது.

சிலரை கர்த்தர் மனப்பூர்வமாய் மகிழ்ச்சியாய் ஆசீர்வதிக்கிறார். உதாரணமாக, ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும், ஈசாக்குக்கு கொடுத்து, மனப்பூர்வமாய் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆசீர்வதித்தார். ஆனால், ஈசாக்கு தன் மூத்த மகனாகிய ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தபோது, “நீ போய் வேட்டையாடி, என் வாய்க்கு ருசியாக சமைத்துக் கொண்டு வா. நான் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று சொன்னார். “மான்-65 ருசியாக வாய்க்குள் இறங்கும்போது, உள்ளேயிருந்து மேன்மையான ஆசீர்வாதங்கள் பொங்கி வரும்” என்பதுபோல, அவர் சொன்னாரோ? என்னமோ தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்பு, யாக்கோபு, துரிதமாக சுவையான உணவைக் கொண்டு வந்து, ஆசீர்வாதத்தை தட்டிக்கொண்டு போய்விட்டார்.

வேதத்திலே நிபந்தனையோடுகூட உள்ள ஆசீர்வாதங்கள் இருக்கின்றன. “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம், உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (உபா. 28:1,2).

ஆபிரகாமை கர்த்தர் ஆசீர்வதித்ததற்கு முக்கிய காரணம், அவர் கர்த்தருடைய வார்த்தைக்கு முழுவதுமாய் செவிகொடுத்து, கீழ்ப்படிந்ததுதான். தன் ஒரேபேறான மகனை பலிபீடத்தில் கட்டைகளின்மேல் கிடத்திவிட்டார். ஆகவே, கர்த்தர் ஆபிரகாமை மூன்று விதங்களிலே ஆசீர்வதிக்க சித்தமானார். 1. கடற்கரை மணலைப் போல ஆசீர்வதிப்பேன் என்றதுபோல, சாராளின் சந்ததியைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். 2. பூமியின் தூளைப்போல உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னபடி, ஆகாரின் குமாரனாகிய இஸ்மவேலை ஆசீர்வதித்தார். 3. வானத்து நட்சத்திரங்களைப்போல, கிறிஸ்துவின் சந்ததியாகிய உங்களை, உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும், ஆசீர்வதிக்க சித்தமானார். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாக, கிறிஸ்துவின் சந்ததியாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

“விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ, அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா. 3:7-9).

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).