ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்!

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12:2).

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள், மிகவும் ஆச்சரியமானவை. மகா மேன்மையானவை. விண்ணளவு உயர்ந்தவை. அந்த ஆசீர்வாதங்களை ஆபிரகாமுக்குப் பிறகு நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வாழும் நாமும், சுதந்தரித்துக்கொள்ள முடியும். எப்படி சுதந்தரித்துக்கொள்ள முடியும்? ஆம், விசுவாசத்தின் மூலமாகத்தான். “விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ, அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக” (கலா. 3:7).

இன்றைக்கும் ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில், ஆபிரகாமின் விசுவாசத்தை ஆதி. 12:1-ல் வாசிக்கிறோம். “கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்று சொன்னார் (ஆதி. 12:1). உடனே ஆபிரகாம், கர்த்தரை விசுவாசித்து, போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனார் (ஆதி. 12:4). அந்த நாட்களில் ஒரு இடத்தை விட்டு, இன்னொரு இடத்திற்கு போகும்போது, எல்லாவிதமான ஆபத்துக்களும் சூழ்ந்திருக்கும். சூழ்நிலைகள், மொழிகள் வித்தியாசமாயிருக்கும். தற்காலத்தைப் போல, பிரயாண வசதிகள் இருப்பதில்லை. கால்நடையாகவும், அல்லது கழுதைகள் மேலும்தான் மெதுவாக செல்லமுடியும். ஆனாலும், ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்து, நூற்றுக்குநூறு கர்த்தரை சார்ந்து கொண்டு புறப்பட்டுப் போனார். அப்பொழுது அவருக்கு குறைந்த வயதல்ல; எழுபத்தைந்து வயதுக்கும் மேலாகி விட்டது.

தேவபிள்ளைகளே, ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு விசுவாசம் தேவை. “விசுவாசம்” என்றால் என்ன? “கர்த்தர் என்னை நடத்துவார்” என்று அவரையே உறுதியாகப் பற்றிக்கொண்டு முன்னேறுவதாகும். “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1). இன்றைக்கு உங்களுடைய விசுவாசத்தை, கர்த்தர் மேல் வையுங்கள். அவரே உங்களை சிருஷ்டித்தவர். உங்கள் எதிர்காலம், அவருடைய கையில் இருக்கிறது. நீங்கள் அவரை நம்பி விசுவாசிக் கும்போது, அவர் உங்களுடைய சகல பொறுப்புகளையும், ஏற்றுக்கொள்வார்.

எழுபத்தைந்து வயதான ஆபிரகாமுக்கு, கர்த்தர் மூன்று சந்ததிகளை வாக்குப் பண்ணினார். முதலாவது, பூமியின் தூளைப்போன்ற சந்ததி (ஆதி. 28:14). இரண்டாவது, கடற்கரை மணலைப் போன்ற சந்ததி (ஆதி. 22:17). மூன்றாவது, வானத்து நட்சத்திரங்களைப் போன்ற சந்ததி (ஆதி. 26:5).வேதம் சொல்லுகிறது, “உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டப்படியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கை யோடே விசுவாசித்தான்” (ரோம. 4:18). தேவபிள்ளைகளே, ஆபிரகாம் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்மேல் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருந்தபடியால், விசுவாசத்தின்படியே “இஸ்ரவேலர்” என்ற, மாபெரும் சந்ததியைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் கர்த்தரையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் விசுவாசியுங்கள். எண்ணற்ற வாக்குத்தத்தங்களை ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குத்தத்தங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு, அவர் உண்மையுள்ளவராகவேயிருக்கிறார்.

நினைவிற்கு:- “அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா. 3:9).