ஆசீர்வாதமான குடும்பம்!

“பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” (ஆதி. 2:18).

“குடும்பம்” என்பது, கர்த்தருடைய அநாதி தீர்மானத்திலிருந்து ஏற்படுத்தப் பட்டது. குடும்ப உறவுகளை கர்த்தர் தாமே கட்டியெழுப்புகிறார். கர்த்தர் ஆதாமை சிருஷ்டித்த பின்பு, ஏதேனை பண்படுத்தவும், காக்கவும் ஏதேன் தோட்டத்திலே வைத்தார். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆகவே, “கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” (ஆதி. 2:20,18). ஒன்று, தனிமையாயிருப்பது நல்லதல்ல. இரண்டாவது, ஏற்ற துணையை உண்டாக்கப்பட வேண்டும்.

குடும்பங்களை கர்த்தர் உண்டாக்குவதற்கு ஒரு முக்கியமான நோக்கம், மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்பதுதான். ஒருவன், வாலிபப் பருவம் அடையும்போது, பெற்றோரோடு இருக்க முடியாமல், தனியாய் சம்பாதிக்கப் புறப்படுகிறான். பின்பு தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். கர்த்தர் தனிமையானவர்களுக்கு வீடு, வாசல் ஏற்படுத்த ஆவலுள்ளவராயிருக் கிறார்.

தனிமையானவர்களுக்கு குடும்பத்தை அமைத்து, கணவன், மனைவியாக அவர்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். குடும்பம், தேவன் ஏற்படுத்துகிறதாகும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும், சமாதானமும், சந்தோஷமும் இருக்க வேண்டு மென்று கர்த்தர் விரும்புகிறார்.

அப்படியிருக்குமானால், கர்த்தர் தாமே, அந்த வீட்டில் மகிமைப்படுவார். வேலையினிமித்தம், ஒரு குடும்பம் பிரிந்திருந்தது. கணவன் குவைத் தேசத்திலே பணியராற்றினார். மனைவியோ, குழந்தைகளோடு இந்தியாவில் இருந்தார்கள். அந்த பிரிவினால் குடும்பத்தில் ஏராளமான பிரச்சனைகள். காரணமில்லாத துயரங்கள். ஒருநாள் அந்த சகோதரி, “மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல” என்ற வேத பகுதியை வாசித்து விட்டு, தேவ சமுகத்தில்போய் முழங்கால்படியிட்டார்கள்.

“நீர் தானே, என் குடும்பத்தை ஏற்படுத்தினீர். கர்த்தருடைய ஆலயத்தில் தானே நாங்கள் கணவன், மனைவியாய் இணைக்கப்பட்டோம். நீர் தானே, எங்களுக்கு குழந்தைச் செல்வங்களை தந்தீர். இப்பொழுது இந்தப் பிரிவும், தனிமையும் எங்களை வாட்டுகிறது. எங்களை ஒன்று சேர்த்தருளும்” என்று சொல்லி ஊக்கமாய் ஜெபித்தார்கள். கர்த்தர் அற்புதத்தை செய்து, அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் விசா கிடைக்கும்படி செய்தார். நான் குவைத் சென்றிருந்த போது, அந்த குடும்பம் இணைந்து, மகிழ்ச்சியாயிருக்கிறதைக் கண்டு, கர்த்தரை ஸ்தோத்தரித்தேன்.

உங்களுடைய குடும்பம் எப்படியிருக்கிறது? சில குடும்பங்கள் ஒன்றாயிருந் தாலும், குடும்பத்திலே உண்மையான ஐக்கியமில்லாமல், மனதளவிலே அவர்கள் பிரிந்து, பலவிதமான கசப்புகளோடு வாழுவார்கள். கர்த்தர் அதை விரும்புவதில்லை. குடும்பத்தை ஏற்படுத்திய கர்த்தர், அந்தக் குடும்பம் அன்பிலும், ஐக்கியத்திலும், ஒருமனப்பாட்டிலும் கட்டியெழுப்பப்படுகிறதையே விரும்புகிறார். தேவபிள்ளைகளே, உங்கள் குடும்பத்தில் ஜெபம் இருக்கட்டும். வேதவாசிப்பு இருக்கட்டும். கர்த்தரை நீங்கள் முன்வைத்து, குடும்பத்தின் வரவு, செலவுகளை யெல்லாம் செய்வீர்களென்றால், கர்த்தருடைய ஆசீர்வாதம் சம்பூரணமாயிருக்கும். ஆகவே, குடும்பமாக கர்த்தரை தேடுங்கள். கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நினைவிற்கு:- “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதி. 2:24).