தேடுங்கள்!

“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4).

கர்த்தரைத் தேடும்போது வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. நீங்கள் கர்த்தரைத் தேட மாட்டீர்களா? என்று அவருடைய கண்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் அவரைத் தேடும்போது, நிச்சயமாகவே கண்டடைவீர்கள். தட்டும்போது திறக்கவும், கேட்கும்போது கொடுக்கவும், கர்த்தர் கிருபையில் ஐசுவரியமுள்ளவராய் இருக்கிறார். கர்த்தரை முழு இருதயத்தோடும், நீங்கள் தேடினால், நிச்சயமாகவே அவரைக் கண்டுபிடிக்க முடியும் (எரே. 29:13).

யோனா மீன் வயிற்றிலிருந்து கர்த்தரைத் தேடினார். கர்த்தர் அவருக்குச் செவி கொடுத்து உயிர்ப்பிச்சை தந்து, கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய கிருபை பாராட்டினார்.

142-ம் சங்கீதத்தைப் பாருங்கள், “தாவீது கெபியிலிருக்கும்போது, பண்ணின விண்ணப்பம்” என்று அங்கே எழுதியிருக்கிறது. சிங்கக்கெபியிலே சிங்கங்கள் தன் குட்டிகளோடு வாசம் பண்ணும். இரை தேடி வெளியே போய் இருக்கும் சிங்கம் எந்த நேரமானாலும், தன் கெபிக்குள்ளே திரும்பி வரக்கூடும்.

அதை விட மோசமாய் சவுல், தாவீதை தேடிக்கொண்டிருந்தார். யாரை விழுங்கலாமோ என்று வகைத் தேடி சுற்றித் திரிகிற பிசாசானவனாகிய சிங்கமும் தாவீதுக்கு விரோதமாய் இருந்தான். அப்படி இருந்த சூழ்நிலையிலும், தாவீது தேவனைத் தேடினார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4) என்பதே அவருடைய சாட்சி!

கர்த்தரைத் தேடும்போது தாவீதுக்கு சிங்கத்தின் ஞாபகம் வந்தது. “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ, ஒரு நன்மையுங்குறைவுபடாது” (சங். 34:10).

தேவபிள்ளைகளே, “பிரச்சனை, பிரச்சனை,” என்று எண்ணி சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடாதிருங்கள். போராட்டங்களைக் கண்டு மலைத்து நின்று விடாதிருங்கள். அந்தச் சூழ்நிலையிலும், கர்த்தரைத் தேடுங்கள். உங்களுக்கு உதவி செய்யும்படி, அவர் தீவிரித்து வருவார்.

ஒருவேளை பல வருடங்களாக, அநேக நன்மைகள் தடைபட்டிருக்கலாம். பிள்ளைகளுடைய திருமண காரியங்கள் கைகூடி வராமல் இருக்கக்கூடும். உபவாசம் இருந்து, கர்த்தருடைய முகத்தைத் தேடுங்கள். என்ன குறைவு உண்டு? என்ன பாவம் உண்டு? எந்த மனிதர்மேல் கசப்பும் வைராக்கியம் உண்டு? என்பதை ஆராய்ந்துப் பார்த்து, தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெபியுங்கள். நிச்சயமாகவே, கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுத்து நன்மையையும், ஆசீர்வாதத்தையும் தந்தருள்வார்.

அன்னாள் மலடியாய் இருந்து, அவச்சோற்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கப் பிரியப்படவில்லை. கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து, கர்த்தரைத் தேடினாள். பொருத்தனையோடு இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள். கர்த்தர் அவளுக்கு உதவி செய்து ஆசீர்வாதமான சந்ததியை கிருபையாய்க் கொடுத்தார். உங்களுக்கும் அற்புதம் செய்வார். இனி நீங்கள் நிந்தையும், அவமானமும் அடையப்போவதில்லை. உங்களுடைய துயரத்தின் நாட்கள் முடிந்துபோகிறது.

நினைவிற்கு:- “நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).