சாந்தத்தின் ஆசீர்வாதங்கள்!

“சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்” (சங். 22:26).

சாந்தகுணத்தின் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. மட்டுமல்ல, அது நித்தியமானவை. சாந்தகுணம் மனிதராலும், ஆண்டவராலும் விரும்பப்படுகிற ஒரு உத்தமமான சுபாவமாகும். ஆவியின் கனிகளாக, கர்த்தர் ஒன்பதை வைத்தார். அந்த ஒன்பது கனிகளின் மத்தியிலே சாந்தம் என்கிற கனி மிக சுவையுள்ளதாய் விளங்குகிறது. குடும்பத்தில் ஒருவன் சாந்தகுணமுடையவனாயிருப்பான் என்றால், அந்த கனியின் நிமித்தம் முழு குடும்பமும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும். கர்த்தர் அந்த கனிகளைக் காணும்போது, மனம் மகிழ்ந்து களிகூருகிறார்.

சாந்தகுணமுள்ளவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்கள் என்னென்ன என்பதை, வேதத்திலிருந்து கண்டுபிடித்து, சுதந்தரித்துக்கொள்ளுங்கள். முதலாவதாக “சாந்தகுணமுள்ளவர்கள், புசித்து திருப்தியடைவார்கள்,” என்று சங். 22:26-ல் வாசிக்கிறோம். இரண்டாவதாக, சாந்தகுணமுள்ளவர்களை கர்த்தர் நியாயத்திலே நடத்தி, அவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார், என்று சங். 25:9 கூறுகிறது. மூன்றாவதாக, சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியா யிருப்பார்கள் (சங். 37:11). நான்காவதாக, கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங். 147:6). ஐந்தாவதாக, சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார் (சங். 149:4).

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களிலே, மோசேயை நாம் சாந்தகுணமுடையவராக காண்கிறோம். வேதம், மோசேயின் சாந்தத்தைக் குறித்து சாட்சிக் கொடுக்கும்போது, அவர் பூமியிலுள்ள சகல மனிதரிலும், மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார் என்று எழுதியிருக்கிறது (எண். 12:3). அவருடைய சாந்தகுணத்திற்கு, பலமுறை சோதனைகள் வந்தன.

ஒருமுறை மிரியாமும், ஆரோனும், மோசேக்கு விரோதமாய் எழும்பினார்கள். மோசே விவாகம் செய்திருந்த எத்தியோப்பிய ஸ்திரீயின் நிமித்தம் முறுமுறுத்தார்கள். மோசேதான் பெரியவரா? எங்களிடம் தேவன் பேசினது இல்லையா? என்று பழித்து பேசினார்கள். பொறாமைக் கொண்டார்கள்.

பதிலுக்கு மோசே பழித்தாரா? இல்லை. கர்த்தர் கோபங்கொண்டு மிரியாமை தண்டித்தபோது, அதிலே சந்தோஷப்பட்டாரா? இல்லை. மிரியாமுக்காக வேண்டுதல் செய்து, அவளுக்கு வந்த குஷ்டரோகத்தை நீக்கும்படி மன்றாடினார். சாந்தகுணத்துக்கு, மோசே நல்ல உதாரணம் அல்லவா?

ஒருமுறை லோத்துவின் மேய்ப்பர்களுக்கும், ஆபிரகாமின் மேப்பர்களுக்கும் சண்டை வந்தது. பாகப்பிரிவினை ஏற்பட்டது. ஆபிரகாம் எவ்வளவு சாந்தகுணமாக பதில் சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள். “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன் என்றார்” (ஆதி. 13:8,9). இது அல்லவா, சாந்தகுணத்தின் இலக்கணம்!

நினைவிற்கு:- “உங்கள் சாந்தகுணம், எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலி. 4:5).