அதிகாலையின் ஆசீர்வாதங்கள்!

“காலையிலே உமக்கு நேரே வந்து, ஆயத்தமாகி, காத்திருப்பேன்” (சங். 5:3).

அதிகாலையின் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. அதிகாலையிலே பரம பிதாவின் பொன் முகத்தை யார் யார் நோக்கிப் பார்க்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகவே தேவ பிரசன்னத்தால் திருப்தியடைவார்கள். அவர்கள் முகங்கள் பிரகாசம் அடையும். ஒருநாளும் அவர்கள் வெட்கப்பட்டுப் போவதேயில்லை. தேவனுடைய பிள்ளைகளே, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய சமுகத்தில் ஆரம்பிக்க பழகிக்கொள்ளவேண்டும். அதை அனுதின கடமையாகக் கொள்ள வேண்டும்.

“அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதி. 8:17). அதிகாலையிலே, கர்த்தரைத் தேடுகிறவனின் ஆத்துமா நிணத்தையும், கொழுப்பையும் உண்டதுபோல திருப்தியாகும் (சங்.63:5). “அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; என் வா ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்” (சங்.63:1,5).

தாவீது ராஜாவாய் இருந்தபோதிலும், எவ்வளவோ வேலைப்பளு இருந்த போதிலும் ஒவ்வொருநாள் அதிகாலை வேளையிலும், கர்த்தருடைய சமுகத்திற்கு ஓடிச் சேன்றார். “அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன் உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்” என்று எழுதுகிறார் (சங்.119:147). அதிகாலை ஜெபம் அவசரமான ஜெபமாக அல்ல; காத்திருந்து ஜெபிக்கும் ஜெபமாக இருக்க வேண்டும்.

தலைசிறந்த தேவ ஊழியரான, ஜான் வெஸ்லியின் தாயாராகிய சூசன்னா வெஸ்லி, அதிகாலை வேளையை கர்த்தரோடு ஆரம்பிப்பது வழக்கம். அவர்களுக்கு ஏராளமான பிள்ளைகள், ஆயினும், அதிகாலை ஜெப நேரத்தை, தவற விடுவது இல்லை. அதுபோல மத்தியானத்தில் ஒருமணி நேரம் ஜெபிப்பதற்காக அறை வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு ஜெபிப்பார்கள். வேலை செய்து கொண்டிருக்கும்போதே, தேவ பிரசன்னத்தை உணருவார்களானால், உடனே தலையிலே முக்காடிட்டுக் கொள்வார்கள். அப்பொழுது பிள்ளைகள் எல்லாம், தங்கள் தாயார் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து, அமைதியாய் இருந்து கொள்வார்கள்.

இன்றைக்கு ஜனங்கள் அவசரமான உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். காலையில் எழும்பும்போதே, அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று பல்வேறு உலகக் கடமைகளை நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே அவசரம்தான். திடீர் இட்லி, திடீர் சாம்பார் என்று, எல்லாம் உடனுக்கு உடனே வந்துவிடவேண்டும். அவர்களுக்கு ஜெபிக்கவோ, தேவ சமுகத்தில் காத்திருக்கவோ, அமைதியாய் அமர்ந்திருக்கவோ விருப்பமில்லை. ஆலயத்திற்கு வந்தாலும், பத்து நிமிட பிரசங்கத்தையே விரும்புகிறார்கள்.

கடைசியில் பார்த்தால், வியாதி வந்து பலமணி நேரங்கள் நாட்கணக்கிலே, மாதக் கணக்கிலே ஆஸ்பத்திரியிலே காத்திருப்பார்கள். கர்த்தருக்காக காத்திருக்காதவர்கள், டாக்டருக்காக பலமணி நேரம் காத்திருப்பார்கள். சிலர் போலீஸ் ஸ்டேஷனிலும், கோர்ட்டிலும் காத்திருப்பார்கள். அவர்களுடைய நேரமெல்லாம் வீணாய் போகும்.

நினைவிற்கு:- “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” (சங்.37:9). “கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்” (நீதி.20:22). “நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை” (ஏசா.49:23).