என்னை ஆசீர்வதித்து…!

“தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து….வேண்டிக்கொண்டான்” (1 நாளா. 4:10).

“யாபேஸ்” என்ற பெயருக்கு, “துக்கம் நிறைந்தவன்” என்பது அர்த்தம். அந்த பெயரை யாபேஸுக்கு சூட்டும்படி, யாபேஸின் தாக்கு என்ன துக்கம் இருந்ததோ தெரியவில்லை. எந்த தாயும் குழந்தை பிறந்த உடனே, அதுவரை அனுபவித்திருந்த எல்லாத் துக்கங்களையும் மறந்து, இளம் பாலகனின் முகத்தைக் கண்டு, பூரிப்படைந்து விடுவாள். ஆனாலும் இந்தத் தாயோ, ஆறுதல் அடையவில்லை. நான் துக்கத்துடனே இவனைப் பெற்றேன் என்று, அவனுக்கு “யாபேஸ்” என்று பெயரிட்டாள். ஆனால் யாபேஸ், ஆசீர்வாத்தை விரும்பினார். தன் பழைய துயரங்களில் மூழ்கி விட விரும்பவில்லை. ஜெபத்தோடு தன் வேதனைகளை அகற்றிவிட, திட்டமாய் தீர்மானம் செய்தார். என்னை ஆசீர்வதிக்கிற கர்த்தர் உயிருள்ளவராய் இருக்கும்போது, நான் ஏன் துக்கத்தோடு வாழவேண்டும்? உன்னதமான தேவனை என் பங்காக கொண்டுள்ள நான், ஏன் கண்ணீரின் பாதையில் சோக நடை போடவேண்டும்?

“என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே, என் எல்லையை விரிவாக்கும் ஆண்டவரே, உம்முடைய கரம் என்னோடிருக்கட்டும் அப்பா,” என்று மனதுருகி ஜெபித்தார். வேதம் சொல்லுகிறது, “அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்” (1 நாளா. 4:10). நம் கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவரும்கூட! உள்ளம் உருகி உங்களை ஆசீர்வதிக்கிறவர். அவரிடத்திலே இம்மைக்குரிய ஆசீர்வாதங்களும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களும் உண்டு. பழைய ஏற்பாட்டை நீங்கள் திரும்பி பார்த்தால், “ஆசீர்வாதம்” என்பது, பூமிக்குரிய, கர்ப்பத்திற்குரிய, மிருகஜீவன்களுக்குரியதாகவே காணப்படுகிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் ஆசீர்வாதங்கள், அவர்கள் மந்தையிலே இருந்தது. ஏராளமான மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் என்று கர்த்தர் அவர்களுக்கு கொடுத்திருந்தார்.

இஸ்ரவேலர்கள், கானானை சுதந்தரித்தபோது, பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசம் அவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தது. திராட்சரசம் ஒரு ஆசீர்வாதம், ஒலிவ எண்ணெய் ஒரு ஆசீர்வாதம், அத்திப் பழங்கள் அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம், வீடுகளும், நிலங்களும், ஆசீர்வாதமாய் இருந்தன. ஆனாலும் புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது, இரட்சிப்பு, அபிஷேகம், ஆவியின் வரங்கள், ஆவியின் கனிகள், இவை எல்லாம் உங்களுக்கு மேன்மையான ஆசீர்வாதங்களாய் இருக்கின்றன.

தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தரிடத்தில் ஆசீர்வாதங்களை, மனம் திறந்து கேளுங்கள். யாபேஸ் கேட்டபோது, அவருடைய துக்கம் மாறி, ஆசீர்வாதம் சுரந்தது. அவருடைய எல்லையெல்லாம் விரிவானது.

புதிய ஏற்பாட்டை நான் வாசிக்கும்போது கர்த்தர் கொடுக்கிற மேன்மையான ஆசீர்வாதங்களைக் கண்டேன். முதலாவது இளைப்பாறுதல். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொல்லுகிறார் (மத்.11:28). 2. பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள் (மத். 16:19). 3. அசுத்த ஆவிகளின் மேல் வல்லமையும், அதிகாரமும் ஆளுகையும் (லூக்கா 10:19). 4. ஜீவத்தண்ணீர் (யோவான் 4:10). 5. நித்திய ஜீவன் (யோவான் 10:28). 6. தேவ சமாதானம் (யோவா.14:27). கிறிஸ்து இயேசுவின் ஆசீர்வாதங்கள் எவ்வளவு அருமையானவைகள்.

நினைவிற்கு:- “அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப் படுகிறார்கள்” (கலா. 3:9).