கொடுக்கிறவர்களுக்கு ஆசீர்வாதம்!

“பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை” (1 இராஜா. 17:16).

கர்த்தருடைய ஆசீர்வாதம், ஒரு நாளும் குறைவடையாது. உங்கள் பானையில் மா செலவழிந்துபோவதும் இல்லை. எண்ணெய் குறைந்து போவதும் இல்லை. பஞ்சகாலம் எல்லாம் அவர் போஷிக்கிறவர். வறட்சியான நாட்களிலும், தம்முடைய பிள்ளைகளை செழிப்பாக்குகிறவர்.

ஏழையான சாறிபாத் விதவையின் வீட்டில், ஒவ்வொருநாளும் அற்புதம் நடந்து கொண்டேயிருந்தது. உலகமெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடின போதிலும், சாறிபாத் விதவையின் வீட்டிலே, மாவும், எண்ணெயும், அப்பமும் குறைவுபடவே இல்லை. காரணம் என்ன தெரியுமா? அவள் தன்னுடைய வறுமையிலும், கர்த்தருக்கென்று கொடுத்ததுதான். இரண்டு விறகு பொறுக்கி, ஒரு அடையைச் செய்து அவளும், அவளுடைய குமாரனும் சாப்பிட்டு மடிந்து போகக்கூடிய சூழ்நிலையில், முதலாவது ஒரு சிறிய அடையை ஆயத்தம்பண்ணி, எலியாவுக்கு கொடுத்தாள்.

அவளுடைய கொடுக்கும், “ஈகை சுபாவத்தை” கர்த்தர் கண்டார். அவளை ஆசீர்வதித்தார். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்” (லூக்.6:38). என்பதுதான், கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் ஆலோசனை.

வேதத்திலுள்ள முற்பிதாக்கள், ஆசீர்வதித்த சில சம்பவங்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. ஆபிரகாம் ஈசாக்கை ஆசீர்வதித்தபோது, எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல், மனப்பூர்வமாய் தனக்கிருந்த யாவற்றையும் ஈசாக்குக்குக் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால் ஈசாக்கு ஆசீர்வதிக்க வேண்டிய வேளை வந்தது. மூத்த மகனாகிய ஏசாவை கூப்பிட்டு, “நீ எனக்காக வேட்டையாடி சுவைமிக்க ஆகாரத்தை சமைத்துக் கொண்டு வா, அதன் பின்பு நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று சொன்னார். எனவே மகன் தகப்பனிடம் ஆசீர்வாதம் பெற, ருசிகரமான சமையல் செய்ய வேண்டியதாயிருந்தது. அதுபோலவே, கர்த்தரும் இயற்கையாய் உங்களை மனமுவந்து, ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதம் உண்டு. நிபந்தனையோடுகூட ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதங்களும் உண்டு. நமக்கு மகிமையான காற்று, சூரிய வெளிச்சம், தண்ணீர் இவைகளை எந்த நிபந்தனையும் இன்றி, இலவசமாய் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அதே நேரம், கர்த்தர் நமக்கு வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார். அது என்ன நிபந்தனை? தசமபாகம் செலுத்தும் நிபந்தனை. “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும், உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று, அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்” என்றார் (மல்கி.3:10).

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆசீர்வாதம் பெறும்படி, கர்த்தர் உங்களுக்கு கொடுக்கிற எல்லாவற்றிலும், தேவனுக்கென்று மனப்பூர்வமாய் தசமபாகங்களை செலுத்துங்கள். நீங்கள் சுவிசேஷகர்களுக்குக் கொடுத்தாலும் சரி, போதகர்களுக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது கர்த்தருடைய நாமத்தில் வருகிற யாருக்காகிலும் கொடுத்தாலும் சரி, அதை தேவனுடைய கரத்தில் கொடுப்பதைப் போல, உற்சாகமாய் கொடுங்கள். அப்பொழுது சம்பூரணமான ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).