களஞ்சியங்களில் ஆசீர்வாதம்!

“கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர், உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா. 28:8).

இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே வாழ்ந்த நாட்களில், வங்கிகளில்லை. இன்று இருப்பதுபோல, கிரடிட் கார்டுகளும் இருந்ததில்லை. அவர்கள் தங்களுடைய சேமிப்புகளையெல்லாம், களஞ்சியங்களில் சேர்த்து வைத்தார்கள். வெள்ளிக்காசுகளையும், பொற்காசுகளையும் திருடர் பயத்தினாலே, தங்கள் தோட்டங்களிலே புதைத்து வைத்தார்கள். தேவைப்படும்போது, தேவையான அளவு, தோண்டியெடுத்துக் கொள்வார்கள்.

யோசேப்பு எகிப்தின் அதிபதியாயிருந்தபோது, மிக ஞானமாக செழிப்பான காலங்களிலுள்ள தானியங்களை, ஜாக்கிரதையாக களஞ்சியங்களில் சேர்த்து வைத்தார். தேசமெங்கும் பஞ்சமுண்டானபோது, அந்த களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு தானியத்தைக் கொடுத்தார் (ஆதி. 41:56). இயேசுவின் வாழ்க்கையிலே, அவரே மாபெரும் களஞ்சியமாயிருந்தார். எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய, தெய்வீக சுகம் அவரில் நிரம்பியிருந்தது. தெய்வீக வல்லமை, கிருபைகள் அவரில் ஏராளமாயிருந்தன. தேவையுள்ள மக்களுடைய தேவைகளை, உலகப்பிரகாரமாகவும் சந்தித்தார், ஆவிக்குரிய பிரகாரமாகவும் சந்தித்தார்.

நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பீர்களானால், உங்களுக்குள்ளே கிறிஸ்துவாகிய களஞ்சியமுமிருக்கிறது, ஆவியானவராகிய களஞ்சியமுமிருக்கிறது. இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான அனைத்தும், அந்தக் களஞ்சியங்களிலே நிரம்பியிருக்கிறது. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஜெபிப்பீர்களோ, எவ்வளவுக்கெவ்வளவு ஊழியம் செய்வீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய களஞ்சியங்கள் நிரம்பி வழிந்துகொண்டேயிருக்கும். “எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில், எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற, ஜனம் பாக்கியமுள்ளது” (சங். 144:13-15).

உங்களுடைய களஞ்சியங்கள், எப்போதும் நிரம்பியிருக்க வேண்டுமானால், அதற்கு ஒரு இரகசியமுண்டு, ஒரு வழிமுறையுண்டு, ஒரு நிபந்தனையுண்டு. அது என்ன? “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும், கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில், திராட்சரசம் புரண்டோடும்” (நீதி. 3:9,10)

கர்த்தர் சொல்லுகிறார், “என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாய பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்” (நீதி. 8:20,21).

தேவபிள்ளைகளே, உங்கள் களஞ்சியங்கள் கர்த்தருக்குப் பயன்படட்டும். அவருடைய ஊழியத்திற்கு உற்சாகமாய் கொடுக்க, கொடுக்க கர்த்தர் உங்களை நிரப்பிக்கொண்டேயிருப்பார். உங்கள் களஞ்சியங்களிலும், பண்டசாலையிலும், தானியம் குறைவதில்லை. திராட்சரசமும், பாலும், தேனும் வற்றிப்போவதுமில்லை. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் நிரம்பி வழியும்.

நினைவிற்கு:- “களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச் செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே. நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்” (ஆகாய் 2:19).