சம்பாதிக்க பெலன்!

“அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபா. 8:18).

“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22). ஆனால் சாத்தான், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகளை சொல்லிக் கொடுக்கிறான். பொருளாசையையும், பேராசையையும், உள்ளத்திலே புகுத்துகிறான். இதனால் பலரும், மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரிக்கிறார்கள். பொய் கேஸுகளை போடுகிறார்கள்.

தவறான வழியிலே சம்பாதிக்கிற செல்வம், ஒருநாளும் நிம்மதியைத் தராது. கோர்ட் என்றும், கேஸ் என்றும், போலீஸ் என்றும் அலைய வைத்து, கடைசியில் நிம்மதியைக் குலைத்துவிடும். பூமிக்குரிய வாழ்க்கைக்குப் பிறகு, அப்படி குறுக்கு வழியில் பணம் சம்பதிப்பவர்கள், பாதாளத்தில் தள்ளப்படுவார்கள். பணம் தீமையானது அல்ல. ஆனால் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1 தீமோ. 6:10).

துன்மார்க்கன், கையிலிருக்கிற பணத்தை வைத்து குடிக்கிறான், வெறிக்கிறான், வேசித்தனத்திற்குச் செல்லுகிறான், சூதாடுகிறான். ஆனால் நீதிமான்களுடைய கையிலே பணம் கிடைக்கும் போது, அவர்கள் அதை ஆத்தும ஆதாயம் செய்யவும், ஆலயங்களைக் கட்டியெழுப்பவும், ஜனங்களுக்கு நன்மை செய்யவும், இப்படி நல்ல காரியங்களுக்கும் செலவழிக்கிறார்கள். கர்த்தர் உங்களுக்கு செல்வத்தைக் கொடுப்பாரென்றால், கர்த்தர் பிரியப்படும்படி, நல்ல வழியிலே தாராளமாய் செலவிடுங்கள். அப்பொழுது உங்களுக்கு வானத்தின் பலகணிகளை திறந்தருளுவார்.

வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்” (ஆதி. 24:1). அந்த ஆசீர்வாதத்தைக் குறித்து, எலியேசர் சாட்சி கொடுத்தபோது, “கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார்; அவர் சீமானாயிருக்கிறார். கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்” (ஆதி. 24:35). என்றான்.

ஈசாக்கைக் குறித்து, “கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால், அந்த வருடத்தில் நூறுமடங்கு பலனை அடைந்தான். அவன் ஐசுவரியவானாகி, வர வர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே, பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டார்கள்” (ஆதி. 26:12-14). யாக்கோபைக் குறித்து, “அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்” (ஆதி. 30:43). நாம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களை, நம்முடைய முற்பிதாக்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் ஐசுவரியவான்களாயிருந்தாலும், நீதிமான்களாயிருந்தார்கள்.

கர்த்தர் உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆனாலும் உங்களுடைய கண்களை ஐசுவரியத்தின்மேலே வைக்காமல், அதை தந்தருளுகிற, கர்த்தருடைய கிருபையின்மேல் சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல், விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது”
(ரோம. 4:13).