வலது கரத்தின் ஆசீர்வாதம்!

“கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது, கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது” (யாத். 15:6).

கர்த்தருடைய வலதுகரத்தைக் குறித்து, வேதம் முழுவதிலும் விசேஷமான காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய வலதுகரம், மகத்துவம் சிறந்திருக்கிறது (யாத்.15:6). அவருடைய வலதுகரம், இரட்சிப்பை உண்டாக்குகிறது (சங்.98:1). அவருடைய வலதுகரம், வானங்களை அளவிட்டது (ஏசா.48:13). அவருடைய வலதுகரத்தில், தீர்க்காயுசு இருக்கிறது (நீதி. 3:16).

யோசேப்பு தன்னுடைய இரண்டு குமாரர்களையும் யாக்கோபிடத்தில் கொண்டுவந்து ஆசீர்வதிக்கும்படி செய்தான். பொதுவாக மூத்த குமாரன் மேல் தான், ஆசீர்வதிக்கிறவர்கள் தங்கள் வலதுகரத்தை வைத்து, ஆசீர்வதிப்பார்கள். இளையகுமாரன் மேல், இடது கையை வைத்து ஆசீர்வதிப்பது உண்டு. ஆனால் யோசேப்பின் பிள்ளைகளை, யாக்கோபு ஆசீர்வதிக்க கைகளை உயர்த்தினபோது, கர்த்தர், அவனுடைய கரங்களை மாற்றிக்கொள்ளும்படி ஆலோசனை சொன்னார்.

அதைக் கண்ட யோசேப்பு, “இதோ, என் தகப்பனார் என்ன செய்வது என்று அறியாமல் செய்கிறாரே,” என்று எண்ணி, தகப்பனை தடுத்தான். “என் தகப்பனே, இவன் மூத்தவன், இவனுடைய தலையின் மேல் உமது வலதுகையை வைக்க வேண்டும்” என்றான். ஆனால் யாக்கோபோ, தேவ சித்தத்தின்படியே இளையவன் மேல் தன் வலதுகரத்தையும், மூத்தவன் மேல் இடதுகரத்தையும் வைத்து ஆசீர்வதித்தார்.

யோசேப்புக்கு இரண்டு பிள்ளைகள் இருந்ததைப் போலவே, பிதாவாகிய தேவனுக்கு இரண்டு ஏற்பாடுகள் இருந்தன. ஒன்று பழைய ஏற்பாட்டிலுள்ள பரிசுத்தவான்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்தின் பிள்ளைகள். இரண்டாவது, புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள், இவர்கள் கிருபையின் பிள்ளைகள். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு இல்லாத விசேஷமான ஒன்றை, நமக்குக் கொடுக்கும்படி, நம்மை முன்குறித்தார் (எபி.11:40).

அந்த விசேஷமான நன்மை என்ன? அது கிறிஸ்துவுக்குள் உன்னதங்களுக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக் கொள்வதுதான்! கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஆசீர்வாதங்கள், கல்வாரிப் பாடுகளின் ஆசீர்வாதங்கள், உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்கள், யாவற்றையும் சுதந்தரித்துக் கொள்வதுதான்! அதைப் பார்க்கிலும் நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய, மேன்மையான ஸ்தானத்துக்கு வருகிறோம். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் தோழர்கள் என்று அழைக்கப்படுகிற மேன்மைகளை மட்டுமே, கடந்து வரமுடியும் (யோவான் 3:29).

ஆனால் தேவனாகிய கர்த்தரோ, தனது வலதுகரத்தை அவர்கள் மேல் வைத்து ஆசீர்வதிக்க விரும்பாமல், புறஜாதிகளும் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பாய் இருந்தவர்களும், மாம்ச இச்சையின்படி நடந்து, மனமும் மாம்சமும் விரும்பினவைகளைச் செய்த, நம்மேல் அன்புகூர்ந்து, கிறிஸ்துவுக்குள்ளாக நம்மைத் தெரிந்துகொண்டு, கிருபையின் மகாமேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள், நம்மை அவரோடேகூட எழுப்பி உன்னதங்களிலே அவரோடுகூட உட்காரவும் சேதார் (எபே. 2:6,7). தேவபிள்ளைகளே, அவர் உங்கள் மேல் வைத்த அன்புக்காக தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிப்பீர்களா?

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).