யோசேப்பின் ஆசீர்வாதங்கள்!

“யோசேப்பு கனிதரும் சேடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் சேடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்” (ஆதி. 49:22).

ஆதியாகமம் 49-ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்த்தால், யாக்கோபு தன் குமாரரையெல்லாம் ஆசீர்வதிப்பதை அங்கு காணலாம். அந்த ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும், யோசேப்பின் ஆசீர்வாதங்களே மிக அருமையானவை. அந்த ஆசீர்வாதங்கள் நித்திய பர்வதம் வரைக்கும் எட்டுகின்றன. “உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள், என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும், வருவதாக” (ஆதி.49:26).

யோசேப்பு இவ்வளவு மேன்மையாய் ஆசீர்வதிக்கப்படக் காரணம் என்ன தெரியுமா? அவர் கர்த்தருக்காகப் பாடு அனுபவிப்பதில், சந்தோஷமுடையவனா இருந்தார். தன் சோந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலைமை. கர்த்தர் கொடுத்த சோப்பனத்தைப் பகிர்ந்து கொண்டபோதோ, ஏராளமான அவமானங்கள், நிந்தைகள், முடிவில், அடிமையாக எகிப்திலே விற்கப்பட்டார். அதோடுகூட அவனுடைய உபத்திரவங்கள் நின்றுவிடவில்லை. போத்திபார் வீட்டை விட்டு ஓட வேண்டியதிருந்தது. சிறைச்சாலையிலே தாங்கமுடியாத கஷ்டங்கள் அனுபவித்தார். ஆனாலும், யோசேப்பு ஒரு கனிதரும் திராட்சச் செடியாயிருந்தார்.

கர்த்தர் ஆசீர்வதிக்கிற நேரம் வந்தது. பதினேழு வயதிலிருந்து, முப்பது வயது வரைக்கும், அவன் அனுபவித்த பாடுகளுக்கு ஒரு முடிவு உண்டானது. தொடர்ந்து எண்பது ஆண்டுகள், நூற்றுப்பத்து வயது வருகிற வரையிலும், எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தப்பட்டார். மட்டுமல்ல, யோசேப்பின் பிள்ளைகளான மனாசே, எப்பிராயீம், கோத்திரப்பிதாக்களாக கருதப்படும் பெரிய கிருபையைப் பெற்றார்கள். மற்ற யாக்கோபின் பேரர்களுக்குக் கிடைக்காத சிலாக்கியம் யோசேப்பின் உண்மையால் அவனுடைய பிள்ளைகளுக்குக் கிடைத்தது. மட்டுமல்ல, யாக்கோபின் சேஷ்டபுத்திர பாகம் மூத்த மகனாகிய ரூபனுக்குக் கிடைக்காமல், பதினொன்றாவது மகனாகிய யோசேப்புக்குக் கிடைத்தது! பத்து பிள்ளைகளைத் தாண்டி, பதினொன்றாவது பிள்ளைக்கு சேஷ்டபுத்திர பாகத்தின் ஆசீர்வாதம் வருவது பெரிய அதிசயமும், ஆச்சரியமுமானது அல்லவா? ஆம், யோசேப்பு ஒரு கனிதரும் திராட்சச்செடி, வறட்சியான போராட்டத்தின் நாட்களிலும்கூட, கனி கொடுக்கிற திராட்சச்செடி!

யோசேப்பின் விலைமதிப்பை, அவனுடைய சகோதரர்கள், இருபது வெள்ளிக்காசுக்குத்தான் மதித்தார்கள். ஆனால், கர்த்தர் அவனை மேன்மையாகவும் அருமையாகவும் கண்டார். அவன் எகிப்திலே இரண்டாவது அதிகாரியாய் விளங்கினான். அவனை விற்றுப்போட்ட அவனுடைய சகோதரர்கள் கூட, அவனுடைய தயவிலே, அவனுடைய பராமரிப்பிலே, வாழவேண்டியதாய் இருந்தது. யோசேப்பின் பெற்றோரும், எல்லா சகோதரரும் அவனுக்கு முன்பாகக் குனிந்து வணங்கினார்கள்.

யோசேப்பின் ஆசீர்வாதங்கள், நித்திய ஆசீர்வாதங்களாய் இருக்கிறபடியால், அவருடைய எலும்புகள் எகிப்தில் இல்லாமல், கானானில் அடக்கம் பண்ணப்படக் கர்த்தர் உதவி செய்தார் (யோசுவா 24:32). நீங்கள் பொறுமையா பாடுகளை சகிப்பீர்களென்றால், பெருக்கமான கர்த்தருடைய ஆசீர்வாதத்தை, என்றென்றைக்கும் பெற்றுக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று. அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று” (ஆதி. 49:25).