போராட்டம்!

“நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்” (ஆதி. 32:26).

யாக்கோபுடைய வாழ்க்கையெல்லாம், போராட்டமாயிருந்தது. தாயின் வயிற்றிலேயே, யாக்கோபுக்கும், ஏசாவுக்கும் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. பிறக்கும் போது “தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்” (ஆதி. 25:26). வாலிப வயதிலே, அண்ணனுடைய சேஷ்ட புத்திரபாகத்தை எடுப்பதற்கு, தந்திரமாக போராடினான். தகப்பனிடம் போராடி, முழு ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டான். பின்பு லாபானோடு போராட வேண்டியதிருந்தது. ஆட்டுமந்தைகளை மேய்க்கும்போது, துஷ்ட மிருகங்களோடு போராட வேண்டியிருந்தது.

ஆனால் போராட்டத்தின் உச்சகட்டம், தேவனோடுப் போராடினது தான். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய, உம்மைப் போகவிடேன்” என்று சொல்லி, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். முடிவில் கர்த்தர் யாக்கோபிடம் “தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்” (ஆதி. 32:28). இதேக் காரியத்தை ஓசியா தீர்க்கதரிசி, “தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அவன் தூதனானவரோடே போராடி, மேற்கொண்டான்; அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்” (ஓசியா 12:3,4) என்று எழுதினார்.

ஆனால் யாக்கோபுக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து, சிந்தித்துப் பார்க்கும் போது, அந்த வெற்றி போராடினதினால் அல்ல, அவரை நோக்கிக் கெஞ்சினதினால் ஏற்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அந்த நேரத்தில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிக்கொண்டது. இனி அவனால் போராட முடியாத நிலைமைக்கு வந்தார். ஆனாலும், தேவனை விடுவதாயில்லை, போராடினான். கர்த்தருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, தன்னுடைய முழு பெலத்தையும் அவர்மேல் தாங்குமாறு செய்து, “என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே” என்று விடாப்பிடியா ஜெபித்து ஜெயங்கொண்டிருந்தார்.

நாமும்கூட, கர்த்தரிடத்திலே போராட வேண்டும். அந்தப் போராட்டம் நாம் அவர்மேல் வைத்த அன்பினிமித்தமுள்ள போராட்டம். அவருடைய கழுத்தை கட்டிப் பிடித்துக்கொள்ளுங்கள். “உம்மை, “அப்பா” என்று அழைக்கும்படி, என் தகப்பனானீரே, தகப்பன் பிள்ளைக்கு இரங்குகிறதுபோல, எனக்கு இரங்கும்” என்று கெஞ்சும்போது, அவருடைய உள்ளம் உருகாமலிருக்குமா? உங்கள் கண்ணீரைத் துடைக்காமல், உங்களைவிட்டு கடந்து போக, மனதுருக்கமுள்ள அவருடைய உள்ளம் சம்மதிக்குமா? உங்களை உதறி தள்ளிவிட்டுச் செல்ல, அவருடைய காருண்யம் இடங்கொடுக்குமா? ஒருபோதும் இல்லை. நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

இயேசு கிறிஸ்துவும்கூட, அப்படித்தான் கெத்சேமனே தோட்டத்திலே மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணியிருந்திருக்கக்கூடும் (லூக். 22:44). “என் சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது,” என்று ஒப்புக்கொடுத்தபோது, உன்னத பெலன் அவரை நிரப்பினது. தேவதூதன் இறங்கி வந்து, அவரை பெலப்படுத்தினான். தேவனுடைய பிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தருடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு ஜெபத்துக்கும் “ஆம்” என்றும் “ஆமென்” என்றும் பதில் தந்தருள்வார்.

நினைவிற்கு:- “அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15).