வானத்துப் பனி!

“தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும், திராட்சரசத்தையும் தந்தருளுவாராக” (ஆதி. 27:28).

பழைய ஏற்பாட்டில், தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பெரிய செல்வம், கர்த்தருடைய நாமத்தினால், அவர்களை ஆசீர்வதிப்பதாகும். அவர்கள், தங்களது பின்வைத்துப்போகிற வயல் நிலங்களைப் பார்க்கிலும், ஆடு மாடுகளைப் பார்க்கிலும், பொன் வெள்ளியைப் பார்க்கிலும், உள்ளம் திறந்து ஆசீர்வதிக்கும் ஆசீர்வாதமே, அதிக விலையேறப்பெற்றதாக காணப்பட்டது.

நமது முற்பிதாக்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள். ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்ற பக்தர்கள் எல்லாம், கர்த்தரோடு உலாவி அவரோடு நெருக்கமாய் இருந்தார்கள் (ஆதி. 5:24, ஆதி. 6:9, யாக். 2:23). ஆகவே, அவர்கள் ஆசீர்வதித்த வார்த்தைகள், தேவனுடைய வார்த்தைகளாகவே வெளிவந்தது.

இங்கு ஈசாக்கு ஆசீர்வதிக்கிறதைப் பாருங்கள். முதலாவது, “வானத்துப் பனியை தேவன் உனக்குத் தந்தருளுவாராக” என்று சொல்லுகிறார். “வானத்துப் பனி” என்பது வானாதி வானங்களை உண்டுபண்ணின, தேவனுடைய பிரசன்னம் அல்லவா?

கர்த்தருடைய பிரசன்னம், ஒரு மனுஷனுக்குக் கிடைப்பது மிகுந்த ஆசீர்வாதமாகும். கர்த்தர் இதையே ஓசியா தீர்க்கதரிசி, மூலமாய் சொல்லுகிறார்: “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப் போல் மலருவான்; லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான்” (ஓசி. 14:5).

“வானத்துப் பனியைப் போலிருப்பேன்” என்று உடன்படிக்கை செய்தவர், அப்படியே யாக்கோபுக்கு வானத்துப் பனியாய் இருந்தார். யாக்கோபு வாலிபனாய் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, வானத்திலிருந்து ஒரு ஏணி, பூமியில் வைக்கப்பட்டிருக்கிறதை, அவர் கண்டார்.

வானாதி வானங்களை உண்டு பண்ணினவர், அந்த ஏணியின் மேலாய் நின்று, யாக்கோபோடுகூட அருமையாக பேசினார். ஒவ்வொரு வார்த்தைகளும் வானத்துப் பனியைப் போல, யாக்கோபின் காதுகளில் விழுந்தது. யாக்கோபு எத்தனை மகிழ்ச்சி அடைந்தார்! தேவபிள்ளைகளே, அதுபோலவே, கர்த்தர் உங்களுக்கு வானத்துப் பனியைப் போலிருப்பார்.

உபா. 32:2-ல் சொல்லுகிறது: “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவது போல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவது போல, என் வசனம் இறங்கும்.” வானத்துப் பனி என்பது, கர்த்தருடைய பிரசன்னம் மாத்திரமல்ல, கர்த்தருடைய வார்த்தையையும் குறிக்கிறது.

கர்த்தருடைய வார்த்தைகளை விலையேறப்பெற்றதாக எண்ணி, உங்களுடைய உள்ளத்தில் வைத்து வையுங்கள். வேதம் சொல்லுகிறது: “அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும். உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை, உனக்குத் தெரியப்படுத்துகிறேன்” (நீதி. 22:18,19).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு வானத்தின் பனியைப் போலிருப்பார். உங்கள் வாழ்க்கை எல்லாம், உங்களோடுகூட கடந்து வருவார். தன்னுடைய மகிமையின் பிரசன்னத்தினால், உங்களை நிரப்பியருளுவார்.

நினைவிற்கு:- “இஸ்ரவேல் சுகமாத் தனித்து வாசம்பண்ணுவான். யாக்கோபின் ஊற்றானது, தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும். அவருடைய வானமும் பனியைப் பெய்யும்” (உபா. 33:28).