உன்னுடனே கூட இருந்து!

“இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்” (ஆதி. 26:3).

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்குக் கர்த்தர் கொடுத்த அருமையான வாக்குத்தத்தத்தை மேலே வாசித்தீர்கள். அன்று ஆபிரகாமுடன், ஈசாக்குடன், யாக்கோபுடன் இருந்து அவர்களை ஆசீர்வதித்த ஆண்டவர், இன்றைக்கு உங்களையும் ஆசீர்வதிக்க சித்தமுடையவராயிருக்கிறார்.

கர்த்தர், ஈசாக்குக்கு தன்னுடைய பிரசன்னத்தையும், தம்முடைய சமுகத்தையும் வாக்களித்து, “நான் உன்னோடுகூட இருப்பேன்,” என்றார். அடுத்ததாக, “இந்த தேசங்கள் யாவையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” என்றார். அடுத்ததாக, நான் ஆபிரகாமுக்கு ஆணையிட்டதை நிறைவேற்றுவேன்” என்றார். எத்தனை அடுக்கடுக்கான ஆசீர்வாதங்கள், பாருங்கள். அதே நேரத்தில், ஈசாக்குக்கும் ஒரு நிபந்தனையையும் விதித்தார். அதே அதிகாரத்தின் 2ம், 3ம் வசனங்களை வாசித்துப் பாருங்கள். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: “நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றார். எகிப்துக்குப் போக வேண்டாம் என்பது, கர்த்தருடைய ஆலோசனையாய் இருந்தது.

ஈசாக்கு தங்கியிருந்த தேசத்தில், பஞ்சம் ஏற்பட்டபோது ஈசாக்கு எகிப்துக்கு போக மனதாயிருந்தார். எகிப்து தேசமானது, அடிமைத்தன வாழ்க்கையும், தேவனுக்கு விரோதமான மீறுதல்களையும் ஞாபகப்படுத்துகிறது. அன்று இஸ்ரவேல் ஜனங்கள், தேவனை விட்டு தூரம் போய், அந்நிய தெய்வங்களுக்கு பலி செலுத்தினபோது, அவர்களை அடிமைத்தனத்திற்கு கர்த்தர் ஒப்புக்கொடுத்தார். அந்த அடிமைத்தனத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் அனுபவித்த வேதனைகள் ஏராளம்.

கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். பலமுறை, நாம் பாவ அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த சந்தர்ப்பம் உண்டல்லவா? நாய் தான் கக்கினதை திரும்பத் திரும்ப தின்பதுபோல, கழுவப்பட்ட பன்றி சேற்றிலே விழுவதைப் போல விட்டுவிட்டு விலகின பாவங்களுக்கு அடிமைப்படவில்லையா? கர்த்தரோடு செய்த பல பொருத்தனைகளை நிறைவேற்றாததினாலும், பிரதிஷ்டையின்படி ஜீவிக்காததினாலும், எத்தனையோ கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏற்பட்டது அல்லவா? ஆகவே, ஆண்டவர் அன்போடு சொல்லுகிறார்: “என் மகனே, நீ விட்டுவிட்டு வந்த பாவ பழக்கங்களுக்கு திரும்பிச் செல்லவேண்டாம். நானே பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும், உன்னை எனக்கு பரிசுத்த ஜனமாக தெரிந்துகொண்டேன். என் பட்சத்தில் நிலைத்திருங்கள், நான் உங்களை ஆசீர்வதிப்பேன்.” தேவ பிள்ளைகளே, எல்லா சூழ்நிலையிலும், கர்த்தர் உங்களோடுகூட இருப்பதையே, மேன்மையாக எண்ணுங்கள். கர்த்தர் என்ன சொன்னாலும், அதை நிறைவேற்றி அவருடைய பிரசன்னத்தை, உங்களோடு காத்துக்கொள்ளுங்கள். யோசுவாவின் வாழ்க்கை உங்களுக்குக் கூறுவது என்ன? “இவ்விதமாய் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி, தேசம் எங்கும் பரம்பிற்று” (யோசுவா 6:27).

நினைவிற்கு :- “ஏனெனில், இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத். 18:20).