ஈசாக்கின் தேவன்!

“ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்” (ஆதி. 26:12,13).

நம்முடைய தேவன், ஆபிரகாமின் தேவன் மட்டுமல்ல, ஈசாக்கின் தேவனுமாவார். தலைமுறை தலைமுறையாய், நம் குடும்பங்களை தெரிந்துகொண்டு, ஆசீர்வதித்து வருகிற தேவன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் ஆசீர்வாதங்கள் இன்றைக்கு நமக்குரியது. கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதிக்கும்போது, ஒன்றிரண்டு மடங்கு அல்ல, நூறு மடங்கு ஆசீர்வதித்தார்! புதிய ஏற்பாட்டிலே விதைக்கிறவனுடைய உவமையை இயேசுகிறிஸ்து சொன்னபோது, நல்ல நிலத்தில் விழுந்த விதைகள், சில முப்பதும், சில அறுபதும், சில நூறுமாக பலன்கொடுத்தன என்று குறிப்பிட்டார். இந்த மூன்று பலன்களுமே ஒரு நல்ல நிலத்தில் விழுந்த விதையினால் வந்தவைதான். ஆனாலும் நல்ல நிலத்திலும், மிக மேன்மையான ஒரு நிலம், நூறு மடங்கு பலனைக் கொடுக்கிறது. அது சம்பூரணமான பலன்.

தேவபிள்ளைகளே, ஈசாக்கின் தேவன், உங்களை பரிபூரணமாய் ஆசீர்வதிக்க பிரியப்படுகிறார். அப். பவுல் எழுதுகிறார், “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாய் இருக்கிறது” (கொலோ. 1:19). அவர் ஜீவன் உண்டாகியிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார் (யோவான் 10:10). கர்த்தர் ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனானார். வரவர விருத்தியடைந்தார். மகா பெரியவனானார். பாருங்கள் நூறு மடங்கு பலனினால், மூன்று வகை ஆசீர்வாதங்கள். ஐசுவரியம், விருத்தி, பேர், புகழ்.

நீங்கள், இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள வேண்டாமா? ஈசாக்கைப் போல, விதை விதையுங்கள். விசுவாசத்தோடு விதை விதையுங்கள். நூறு மடங்கு அறுவடை செய்வோம் என்கிற நம்பிக்கையோடு, விதை விதையுங்கள். அநேகர் விதை விதைக்காமல், அறுவடை செய்வதற்கு, அரிவாளை எடுத்துக் கொண்டு போகிறார்கள். அவர்கள் எதை அறுவடை செய்ய முடியும்?

ஜெப விதைகளை, விதையுங்கள். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங். 126:5). இன்றைக்கு உலகமெங்கும் அறுவடை மிகுதியாய் இருக்கிறது. ஆத்துமாக்கள் அறுவடைக்கு தயாராக இருக்கிறார்கள். கண்ணீரோடு ஜெபிக்கிறவர்கள்தான், அந்த ஆத்துமாக்களை அறுவடை செய்வார்கள். நீங்கள் ஊழியம் செய்ய விரும்பினால், முதலாவது கண்ணீரோடு விதையுங்கள். சாலொமோன் ஞானி சொல்லுகிறார், “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு, அதின் பலனைக் காண்பாய்” (பிர. 11:1).

நான் முழு நேர ஊழியத்திற்கு வந்தபோது, அரசாங்க வேலையிலிருந்து வந்த வருமானம் நின்று போயிற்று. ஆகவே, என்னுடைய குடும்பத்தை நடத்துவதற்கும், ஊழியத்தை செய்வதற்கும், எனக்கு பணத்தேவை மிகவும் அதிகமாய் இருந்தது. கர்த்தர் சொன்னது எல்லாம், “நீ அதிகமாய் விதைத்து, அறுவடை செய்” என்பதாகும். முன்பு சம்பளம் வாங்கின பின்பு, தசமபாகம் செலுத்துவேன். ஆனால் முழு நேர ஊழியத்திற்கு வந்த பின்பு, முதலாவது நான் எவ்வளவு அறுவடையை எதிர்பார்க்கிறேனோ, அதற்கான தசமபாகத்தை முதலிலே செலுத்திவிட்டு, பின்பு நூறு மடங்கு அறுவடை செய்தேன். கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, ஆசீர்வதித்தார். உங்களையும் அப்படியே ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:6,7).