ஆசீர்வதிப்பதற்கு!

“வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக” (ஆதி.14:19).

ஆபிரகாமை ஆசீர்வதிப்பதற்கு, கர்த்தர் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருந்த, மெல்கிசேதேக்கை கர்த்தர் ஏற்படுத்தியிருந்தார். இந்த மெல்கிசேதேக்கு அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொண்டு வந்து, ஆபிரகாமுக்கு கொடுத்து ஆபிரகாமை ஆசீர்வதித்தார்.

அப்பமும் திராட்சரசமும் என்ற பதம் வேதத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் வந்து கொண்டே இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அப்பமும் திராட்சரசமும் திரளாய் இருப்பது பெரிய ஆசீர்வாதமாகும்! ஈசாக்கு தன் மகனை ஆசீர்வதிக்கும்போது கூட, தானியத்தினாலும், திராட்சரசத்தினாலும் ஆசீர்வதித்தார் (ஆதி.27:28,29).

புதிய ஏற்பாட்டில் இதற்கு அழகான அர்த்தம் உண்டு. “அப்பம்” என்பது, இயேசுவினுடைய சரீரத்தைக் குறிக்கிறது. “திராட்சரசம்” என்பது, அவருடைய இரத்தத்தைக் குறிக்கிறது. தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, அவருடைய சரீரமும், இரத்தமும் கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமல்லவா!

இயேசு, தாம் காட்டிக் கொடுக்கப்படுகிற அந்த இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அந்த அப்பத்தைப் பிட்டு சொன்னார், “இது உங்களுக்காக பிட்கப்படுகிற, என்னுடைய சரீரமாக இருக்கிறது. இதை வாங்கிப் புசியுங்கள்,” என்றார். சீஷர்கள், அன்று அந்த அப்பத்தை வாங்கி புசித்தார்கள். இன்று நாம் திருவிருந்து ஆராதனையிலே, ஆண்டவருடைய சரீரத்தை வாங்கி புசிக்கிறோம். அது, நம்முடைய மாம்சத்தோடு மாம்சமாக கலக்குகிறது. கிறிஸ்துவின் சரீரத்திற்கும், மாம்சத்திற்கும் உரியவர்களாக, நம்மை மாற்றிவிடுகிறது. சரீரப்பசியை அப்பம் தீர்ப்பது போல, ஆன்மீக பசியை கிறிஸ்துவின் சரீரமாகிய அப்பம் தீர்க்கிறது. அதுபோலவே, அன்று கர்த்தர் திராட்சரசத்தை எடுத்து, அதை ஆசீர்வதித்து சீஷர்களுக்குக் கொடுத்து, இதை பானம்பண்ணுங்கள் இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற என் புது உடன்படிக்கையின் இரத்தமாக இருக்கிறது என்றார். இன்று திருவிருந்தில், நாம் அதை பானம்பண்ணுகிறோம். அது, புது ஜீவனை நமக்கு தருகிறது. திராட்சரசம், சரீரத்தின் தாகத்தை தீர்க்கிறது. கிறிஸ்துவின் இரத்தமாகிய திராட்சரசம், நம்மை பாவங்களறக் கழுவி, சுத்திகரித்து நீதிமான்களாக்கி விடுகிறது.

இயேசு சொன்னார்: “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். என் மாம்சம், மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது” (யோவான் 6:52-55).

மெல்கிசேதேக்கு, அன்று ஆபிரகாமுக்கு அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொடுத்தது போல், இயேசு நமக்காக தன்னுடைய இரத்தத்தையும், சரீரத்தையும் கொடுத்தார். தேவபிள்ளைகளே, தேவ சமுகத்தில் அப்பத்தையும், திராட்சரசத்தையும் பெற்றுக் கொள்ளும் போதெல்லாம், கர்த்தருடைய தியாகமான மரணத்தை கண்ணீரோடு நினைவுகூருவீர்களா?

நினைவிற்கு:- “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்” (1 கொரி. 11:28).