பேரை பெருமைப்படுத்துவேன்!

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12:2).

கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார். மாத்திரமல்ல, உங்களுடைய பேரையும் பெருமைப்படுத்துவேன் என்று வாக்களிக்கிறார். இன்றைக்கு மனுஷர்கள் பேர், புகழுக்காக ஓடுகிறார்கள். குடும்பத்திலும், அலுவலகத்திலும், வியாபார ஸ்தலத்திலும் நல்ல பெயரோடு முன்னேற வேண்டுமென்பதில்தான் அவர்கள் மிகுந்த அக்கறை யெடுக்கிறார்கள். பெயர் கெட்டுவிட்டால், அது ஒரு மானப் பிரச்சனையாய் மாறிவிடுகிறது. “மயிர் நீப்பான் உயிர் வாழா கவரிமான்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு கவரிமானுக்கு, பேர் புகழெல்லாம் அதனுடைய ரோமத்தில் இருக்கிறது. அந்த ரோமம் பிடுங்கப்பட்டால், அது மானத்தை இழந்ததாக கருதி, மரித்துப் போய்விடுமாம்.

கர்த்தர் சொன்னபடியே, இன்றைக்கும் ஆபிரகாமினுடைய பெயர், மிகவும் சிறந்து விளங்குகிறது. ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்று யூதர்கள் அழைக்கிறார்கள். முஸ்லீம் மார்க்கத்தில், ஆபிரகாமை “இப்ராகீம்,” “இஸ்லாமியரின் தந்தை” “நபீ” என்று அழைக்கிறார்கள். நாமோ ஆபிரகாமை, “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கிறோம். பாருங்கள், ஆபிரகாம் யூத மார்க்கத்திலும், முஸ்லீம் மார்க்கத்திலும், கிறிஸ்தவ மார்க்கத்திலும், மிகவும் பேர் பெற்று விளங்குகிறார். அவருடைய பேரை, காலத்தால் அழிக்க முடியவில்லை.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் பேரை நிச்சயமாகவே பெருமைப்படுத்துவார். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், கர்த்தரை நேசித்து, கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரையே சேவிப்பீர்களென்றால், நீங்கள் வாலாகாமல் தலையாவீர்கள்; கீழாகாமல் மேலாவீர்கள். மாத்திரமல்ல, அவர் உங்கள் பேரைப் பெருமைப்படுத்துவார்.

கர்த்தர் யோசேப்பின் பெயரை, எவ்வளவு பெருமைப்படுத்தினார். அதைக்குறித்து யோசேப்பு தன் சகோதரர்களோடு பேசும்போது, “நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” (ஆதி. 45:8). வேதம் சொல்லுகிறது: “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமு. 2:8).

தேவபிள்ளைகளே, இன்றைக்கு நீங்கள் இருக்கிற கீழான நிலைமைகளெல்லாம் மாறிப் போகும். இன்றைக்கு இருக்கிற நிலைமையைப் பார்க்கிலும், கர்த்தர் ஆயிரம் மடங்கு, உங்களை ஆசீர்வதிப்பார் (உபா. 1:11). மாத்திரமல்ல, உங்களுடைய பேரையும் பெருமைப் படுத்துவார்.

கர்த்தர் தாவீதைப் பார்த்து, “நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை, நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களை யெல்லாம், உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்” என்றார் (2 சாமு. 7:8,9). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் பேரைப் பெருமைப்படுத்துவார்.

நினைவிற்கு:- “ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்” (1 இராஜா. 14:7).