கீழ்ப்படிதல்!

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12:2).

கர்த்தர், ஆபிரகாமை ஆசீர்வதித்ததின் அடிப்படைக் காரணம் என்ன? முதலாவது, ஆபிரகாமிலே காணப்பட்ட “கீழ்ப்படிதல்” கர்த்தருடைய இருதயத்தை கவர்ந்தது. கர்த்தருக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிந்து, தன் தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, கர்த்தர் காண்பிக்கும் தேசத்துக்குப் போனார் (ஆதி. 12:1).

நீங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியவேண்டுமானால், உலக நட்புறவுகள், உலக பாசங்கள், உலக ஆசை இச்சைகள், உலக ஞானங்களை விட்டு விட்டு, முற்றிலும் கர்த்தரையேப் பின்பற்ற தீர்மானிக்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அவருக்கு கீழ்ப்படிந்து, அவரைப் பின்பற்ற வேண்டும்.

கர்த்தர் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை விரும்புகிறார். அவர் ஒரு போதும் புறஜாதி மார்க்கத்தாரின் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்களை விரும்புகிறவரல்ல. அவைகள் அவருக்கு அருவருப்பாய் இருக்கின்றன. தேவனுக்கு பிரியம் இல்லாதவைகளை நீங்கள் அகற்றிவிட்டு, எப்பொழுதும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், அவருடைய வார்த்தையின்படியே நடக்கவும், உங்களை அர்ப்பணிக்க வேண்டியது அவசியம்.

“இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளை களின்படியெல்லாம் செய்ய, நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா.28:1). கர்த்தருடைய கட்டளைகளும், நியமனங்களும் பாரமானவைகள் அல்ல. அவருடைய நுகம் மெதுவாயும், அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறது (மத். 11:30). கர்த்தர் அங்கலாய்த்து சொல்லுகிறார், “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால், நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம், நதியைப்போல் இருக்கும்” (ஏசா. 48:18).

ஆபிரகாமுடைய கீழ்ப்படிதல், நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவர் இனத்தையும், ஜனத்தையும், தன்னுடைய சேர்ந்த தகப்பன் வீட்டையும், தேசத்தையும் விட்டு புறப்பட்ட போது, அவருக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. இளம் வயதில், ஒருவர் புறப்பட்டுப்போ, ஒரு புதிய தேசத்திலே வாழ்க்கை தொடங்கிவிடலாம். அது எளிது. ஆனால் வயது முதிர்ந்த நாட்களில், இனத்தவர்களையும், நண்பர்களையும் விட்டுவிட்டு, புதிய தேசத்துக்குப்போவது, கடினமான காரியம்.

ஆபிரகாமினுடைய இன்னொரு கீழ்ப்படிதலும், நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. சொந்த மகனை, ஏகசுதனை, நேசகுமாரனை பலி சேலுத்தவேண்டும் என்று கர்த்தர் சொன்னபோது, மறுவார்த்தை பேசாமால், அப்படியே கீழ்ப்படிந்தார். “என் ஆண்டவர், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர். என் மகன் மரித்தாலும், திரும்பத் தருவார்” என்று விசுவாசித்தார் (ரோமர் 4:17). தேவபிள்ளைகளே, தேவ ஆசீர்வாதத்தை பெறுவதற்கு சம்பூரணமாய் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (1 சாமு. 15:22).