விசுவாசத்தில் உறுதி!

“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல், உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு” (யூதா 1:20).

இங்கே அப். யூதா, “பரிசுத்தமான விசுவாசத்தை”க் குறித்து எழுதுகிறார். உள்ளத்தில் விசுவாசமிருந்தால் மட்டும் போதாது. அது உறுதியானதாக இருக்க வேண்டும். எந்த சோதனைகள் வந்தாலும், எந்த பிரச்சனை வந்தாலும், புயல் காற்று வீசினாலும், வாழ்க்கை கொந்தளித்தாலும், விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின்மேல், உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
எங்களுடைய வீட்டுக்கு எதிரிலே, ஒரு கிறிஸ்தவ குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தின் மூத்த பையன், மெக்கானிக் கடை வைத்திருந்தான். ஒருநாள் யாரோ அவனுடைய சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்கள். அவன் மரித்துவிட்டான். இந்த செய்தியை அவனுடைய சகோதரர்கள் கேள்வி பட்டபோது, கிறிஸ்தவ வசனங்களை, வீட்டிலிருந்து ரோட்டிலே கொண்டு வந்து எறிந்தார்கள். வேதாகமத்தை கிழித்து தீ வைத்தார்கள். “ஏன் கடவுள், எங்கள் அண்ணனை காப்பாற்றவில்லை? இந்த கிறிஸ்து, எங்களுக்கு வேண்டாம்” என்று சொன்னார்கள். உறுதியில்லாத கிறிஸ்தவர்கள்.
இவ்வளவுக்கும், அவர்களுடைய அண்ணன், ஒருநாளும் ஆலயத்திற்குப் போனதில்லை. ஆண்டவரைத் தேடவுமில்லை. இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெறவுமில்லை. அவனைக் கர்த்தருக்குள்ளே உறுதிப்படுத்தியிருந்திருப்பார்களென் றால், பரலோகத்தில், அவனை காண்போம் என்ற விசுவாசமாவது இருந்திருக்கும்! வேதம் சொல்லுகிறது. “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை, முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” (எபி. 3:14).
இயேசு கிறிஸ்து, மரித்துப்போன எத்தனையோ பேரை, உயிரோடு எழுப்பினார். மரித்த யவீருவின் மகளான, சிறுமியை எழுப்பினார். மரித்த நாயீனூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார். மரித்து நான்கு நாட்களாகி, நாறின நிலைமையிருந்த, லாசருவை உயிரோடு எழுப்பினார். ஆனால் அந்த குடும்பத்தாருக்கு, கிறிஸ்தவ மார்க்கத்திலே, வேத வசனத்திலே நம்பிக்கையே இல்லை. மறுபடியும் எங்கள் சகோதரனைக் காண்போம், என்ற விசுவாசமுமில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் புயல் வீசி, பெருமழை வந்தபோது, எல்லா மன உறுதியையும் இழந்துவிட்டார்கள்.
ஆனால் வேதம் சொல்லுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).
இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33). அதன் அர்த்தம் என்ன? அலைமோதுகிற கிறிஸ்தவர்களாயிராமல், “உறுதிப்பட்டவர்களாயிருங்கள்” என்பதே அதன் அர்த்தம்.
தேவபிள்ளைகளே, எந்த நிலையிலும், ஆவிக்குரிய உறுதியை இழந்துவிடாமல், விசுவாசத்திலே நிலைகொண்டிருங்கள். ஆவியிலே ஆரம்பித்து, மாம்சத்திலே முடிவடைந்துவிடாதிருங்கள். ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் (ரோம. 12:12). அழைப்பிலே உறுதியாயிருங்கள் (2 பேது. 1:10).

நினைவிற்கு:- “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதி யாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப் போம்” (எபி. 3:14).