விசுவாசத்தில் ஐசுவரியம்!

“தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும், தெரிந்துகொள்ள வில்லையா?” (யாக். 2:5).

நம் தேவன், விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர். விசுவாசத்தினால் உலகத்தை யெல்லாம் சிருஷ்டித்தார். “விசுவாசத்தினாலே, நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால், உண்டாக்கப்பட்டதென்றும், அறிந்திருக்கிறோம்” (எபி. 11:3). சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள், எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். கர்த்தர் இப்பொழுது உங்களை விசுவாசத்திலே பாக்கியவான்களாக மாற்ற விரும்புகிறார்.
“ஸ்மித் விகிள்ஸ் வொர்த்,” என்பவர், படிப்பறிவில்லாதவர். அவர் வீடு வீடாகச் சென்று, பைப்புகளை பழுது பார்ப்பார். கூலி வேலை செய்துகொண்டிருந்தாலும், கர்த்தர், அவரை விசுவாச வீரனாய் மாற்ற சித்தங்கொண்டார். இரட்சிக்கப்பட்ட போது, விசுவாசத்தில் பாக்கியவானாய் மாறினார். விசுவாசத்தினாலே, அவர் மரித்த 23 பேரை உயிரோடு எழுப்பினார். அவர் சொன்னார், “என்னை விசுவாசத்தில் பாக்கியவானாய் மாற்றினது, தேவனுடைய வசனம்தான். வேதத்தை வாசிக்க வாசிக்க, வெள்ளம்போல பரலோக விசுவாசம் எனக்குள் வந்தது. நான் சட்டையை போட மறந்தாலும், கால்களுக்கு செருப்புப் போட மறந்தாலும், வேதம் வாசிக்க மறப்பதேயில்லை” என்றார்.
அன்று தோமாவையும், இன்று உங்களையும் பார்த்து, கர்த்தர் சொல்லுகிறார், “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு. நீ விசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பாய். நீ விசுவாசமுள்ளவனாய் இந்த மலையைப்பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னால், அது அப்படியே ஆகும்.” உலகத்தார், பணத்தையும், செல்வத்தையும், உலகத்தின் மகிமையுமே தேடுகிறார்கள். குறுக்கு வழியில் ஐசுவரியவானாகிவிட முடியாதா என்று, ஏக்கம் கொள்ளுகிறார்கள். ஆனால், தேவனுடைய ஞானம், அறிவு, கிருபை, இரக்கங்கள் எல்லாம், விசுவாசத்தின் மூலமாகவே, நமக்குக் கிடைக்கிறது. ஆகவே, விசுவாசத் திலே ஐசுவரியவான்களாகும்படி விரும்புங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது உலகப்பிரகாரமான ஐசுவரியங்களெல்லாம், உங்களுக்குக்கூட கிடைக்கும். விசுவாசத்தினாலே நீங்கள் தேட வேண்டியது, தேவனுடைய ஐசுவரியங்களாகும் (மத். 6:33).
நம்முடைய தேவன் யார்? அவர் பெரிய மகிமையின் ராஜா. பூமியும், அதின் நிறைவும், உலகமும், அதின் குடிகளும், கர்த்தருடையவைகள். வெள்ளியும், பொன்னும் அவருடையவை. சகல பறவைகளும், காட்டுமிருகங்களும், அவருடையவைகள். முத்துக்களையும், வைரங்களையும், வைடூரியங்களையும் சிருஷ்டித்த, அவருக்கு முன்பாக, உலக ஐசுவரியங்கள் எம்மாத்திரம்?
ஒரு அமெரிக்க ஊழியர் சொன்னார், உலகத்தின் அத்தனை நாடுகள் மத்தியிலும், அமெரிக்கா, இவ்வளவு ஐசுவரியமுள்ளதாய் திகழ காரணம் என்ன? நாங்கள் கர்த்தரை விசுவாசிப்பதேயாகும். எங்கள் ஒவ்வொரு டாலர் நோட்டிலும் “ஐண எணிஞீ தீஞு ணாணூதண்ணா” என்று அச்சிட்டிருக்கிறோம் என்றார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற, விசுவாச ஐசுவரியம் எவ்வளவு பெரியது! அவை உலக ஐசுவரியங்களைப் பார்க்கிலும், கோடி மடங்கு மேன்மையானது. ஆகவே விசுவாசத்தோடு, கர்த்தருக்கென்று எழும்பிப் பிரகாசிப்பீர்களா?

நினைவிற்கு:- “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது” (ரோம. 11:33).