விசுவாசத்தினால் பெலன்!

“உங்கள் விசுவாசம், மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்” (1 கொரி. 2:4).

விசுவாசமும், தேவனுடைய பெலனும், ஒன்றோடொன்று இணைந்தவை. உங்களுடைய உள்ளத்திலிருந்து புறப்படுகிற வல்லமையான விசுவாசம், தேவனிடத் திலிருந்து, தெய்வீக பெலனைக் கொண்டு வருகிறது. சிலருக்கு விசுவாசத்தினாலே, காண்டாமிருகத்தைப்போல பெலனுண்டு. சிலருக்கு அந்த விசுவாசத்தினாலே, யுத்தத்தில் ஜெயங்கொள்ளும் பெலனுண்டு. சிலர் விசுவாசத்தினாலே, கழுகு களைப்போல, உன்னதங்களுக்கு எழும்புகிறார்கள்.
விசுவாசிக்கிறவர்களின் பெலன், உணவிலிருந்தோ, கடினமாய் செய்யும் உடற் பயிற்சியிலிருந்தோ ஏற்படுவதில்லை. அதை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து பெறுகிறார்கள். விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கும் ஜெயம். விசுவாசமே, கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திபாரம். விசுவாசித்தால், நிச்சயமாய் நீங்கள் தேவ மகிமையைக் காண்பீர்கள். அப். பவுல், விசுவாசத்தினால் வரும் பெலனை சுதந்தரித்துக்கொண்டார். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே, எல்லா வற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13). ஆம், உலகம், மாம்சம், பிசாசை ஜெயித்து, சாட்சியாய் வாழ, உங்களுக்கு உன்னத பெலன் தேவை. ஆவி யிலும், ஆத்துமாவிலும், உள்ளான மனுஷனிலும், உங்களுக்கு பெலன் தேவை.
இன்று, பலவிதமான விளம்பரங்களை, தினசரி பேப்பரிலும், டெலிவிஷனிலும் நீங்கள் காணலாம். ஹார்லிக்ஸ். போன்விட்டா என்று, சத்துமிக்க பானங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். “நோஞ்சானாயிருந்தவன், பலசாலியாய் மாறி விட்டான்,” என்று சொல்லி, பல லேகியங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஒருமுறை, என்னுடைய அலுவலகத்திலே, பதவி உயர்வுக்காக நான் எழுதின பரீட்சையில் திரும்பத் திரும்ப தோல்வியடைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி, “முழு நேரத்தையும், நீங்கள் ஊழியத்திற்கு செலவழித்துவிட்டு, எப்படி பரீட்சையில் பாஸ் பண்ண முடியும்? ஒன்று செய்யுங்கள். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே, இந்த தேர்வில் வெற்றிபெற எனக்கு பெலனுண்டு என்று விசுவாசத்தோடு சொல்லி படியுங்கள்” என்றாள். அப்படி நான் செய்தபோது, அடுத்த முறை வெற்றி பெற்றேன்.
சாராளைக் குறித்து, வேதம் என்ன சொல்லுகிறது? “விசுவாசத்தினாலே, சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர், உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்” (எபி. 11:11). மட்டுமல்ல, அந்த தெய்வீக பெலனால்தான் பிள்ளைக்கு பால் கொடுக்கவும், வளர்க்கவும், கிருபையைப் பெற்றுக்கொண்டாள்.
விசுவாசத்தினாலே, பெலன்கொள்ள விசுவாச அறிக்கை செய்வது, மிகவும் முக்கியமானதாகும். “நான் விசுவாசித்திருக்கிறவர், இன்னாரென்று அறிந்திருக் கிறேன்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள். உங்களை அறியாமலேயே தேவ பெலன் உங்களுக்குள் இறங்கிக்கொண்டேயிருக்கும். அது உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை, பெலன்கொள்ள கிருபை செய்யும்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்து உங்களை உன்னதத்துக்குரிய சகல ஆசீர்வாதங் களினாலும், ஆசீர்வதித்திருக்கிறார் (எபேசி. 1:3). உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்பதாகவே, கிறிஸ்துவுக்கு முன்குறித்து தெரிந்துகொண்டிருக்கிறார் (எபேசி. 1:4). என்று அறிக்கை செய்யுங்கள். பெலன் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “என் கிருபை உனக்குப்போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி. 12:9).