மரியாளின் விசுவாசம்!

“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” (லூக். 1:45).

பாக்கியவான்களைக் குறித்து, நூற்றுக்கணக்கான இடங்களிலே, நீங்கள் வாசிக்கலாம். ஆனால் பாக்கியவதியைக்குறித்து, ஒன்றிரண்டு இடங்களிலே தான் வாசிக்க முடியும். லேயாள், தன்னை பாக்கியவதி என்று அழைத்தாள் (ஆதி. 30:13). குணசாலியான ஸ்திரீ, பாக்கியவதி. “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்” (நீதி. 31:28). அதுபோல, இயேசுவின் தாயாராகிய மரியளும்கூட, “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார். இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” (லூக். 1:48) என்றாள்.
மரியாளை, “பாக்கியவதி” என்று அழைப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்களுண்டு. முதலாவது, மரியாளின் தாழ்மை. தன்னுடைய தாழ்மையைக் குறித்து, மரியாள் சொல்லும்போது, “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்,” என்று சொல்லுகிறாள்.
கர்த்தருக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தி, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக். 1:38) என்று ஒப்புக்கொடுத்தாள். “தாழ்மை” என்றால், அநேகர், “அவமானம்” என்றும், “தன்மான இழுக்கு” என்றும் கருதுகிறார்கள். வேதத்திலே தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் கிருபையளிக்கிறார், என்று திரும்பத் திரும்ப சொல்லுகிறது (நீதி. 3:34, 1 பேது. 5:5). மரியாளின் வாழ்க்கையை, நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், எந்த ஆவிக்குரிய பெருமையோ, மனமேட்டிமையோ, அவர்களில் காணவே முடியாது. “ஆண்டவருடைய தாயார்,” என்று மேன்மையாய் அழைக்கப்படும் பெருமையைக் கூட, தன்னுடைய உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேவகுமாரன், மனுஷகுமாரனாக, தன்மூலமாய் உலகத்துக்கு வெளிப்பட்ட போதிலும், அவர் உலகத்தில் ஆயிரமாயிரமான அற்புதங்கள் செய்தபோதிலும், இயேசுவின் தாயாரோ, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல், அமைதியாய் அடக்கமாய், கிறிஸ்துவுக்கு பணிவிடை செய்தாள். தேவகுமாரனாகிய கிறிஸ்துவை வைத்து, தனக்கு புகழ் தேடவோ, விளம்பரப்படுத்தவோ, தம்பட்டமடிக்கவோ செய்யாமல், வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும், மிகுந்த மனத்தாழ்மையோடுகூட நடந்து கொண்டது, தேவனுக்குப் பிரியமான சுபாவம் அல்லவா?
இரண்டாவது, மரியாளுக்குள்ளிருந்த, “பரிசுத்தமான விசுவாசம்.” மரியாள் எல்லாவற்றிலும் பூரணமாய் கர்த்தரை விசுவாசித்தாள். அந்த விசுவாசத்தைக் கண்டு, யோவான்ஸ்நானனின் தாயாரான எலிசபெத்து, மரியாளை வாழ்த்தும்போது, “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்” என்றாள். பாருங்கள்! அவளிடம் தேவதூதன் சொன்னான். “நீ பயப்படாதே, உன்னிடத்தில் பிறக்கப்போகிறது உலகத்தை இரட்சிக்கக்கூடிய மீட்பரான இயேசு.” அந்த நேரம், மரியாள் புருஷனை அறியாத சூழ்நிலை. குழந்தை பிறப்பதற்கு, வாய்ப்பேயில்லை. ஆனாலும், கர்த்தர் சொன்னதை, விசுவாசித்தபடியால், அவள் பாக்கிவதியானாள். நீங்களும்கூட, எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் ஐம்புலன்களால் காண முடியாவிட்டாலும், கர்த்தரை விசுவாசியுங்கள். நிச்சயமாய் அது நிறைவேறும்.

நினைவிற்கு:- “எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று” (லூக். 1:40,41).