விசுவாசத்தினாலே யோசேப்பு!

“விசுவாசத்தினாலே யோசேப்பு, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்” (எபி. 11:22).

எபிரெயர் 11-ம் அதிகாரம் முழுவதும், விசுவாச வீரர்கள் செய்த அரிய பெரிய செயல்களால் நிரம்பியிருக்கிறது. ஒவ்வொருவருடைய விசுவாசமும், மற்றவர் களை விட வேறுபட்டது. ஆபேலுக்கு இருந்த விசுவாசம் வேறு. ஏனோக்குக்கு இருந்த விசுவாசம் வேறு. ஆபிரகாம் தனது விசுவாசத்தை, செயல்படுத்தின முறைகள் வேறு.
ஒரு சமுத்திரத்தில், எண்ணற்ற வகையான மீன்கள் இருக்கிறதுபோல, விசுவாசத்தில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் எப்படி கர்த்தரை அறிந்திருக்கிறார்களோ, எப்படி வேதத்தை தியானித்து பொருள் கொள்ளுகிறார்களோ, அப்படியே விசுவாசத்தை செயல்படுத்துகிறார்கள். யோசேப்பின் விசுவாசத்தைப் பாருங்கள். என் எலும்புகள் எகிப்திலிருக்கக்கூடாது. என்றாவது ஒரு நாள், அதை கானானுக்குள் எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும். முற்பிதாக்கள் இருக்கும் கல்லறையில் தன்னுடைய எலும்புகளும் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார்.
இந்த விசுவாசம், யோசேப்புக்குள் எப்படி வந்தது? ஆம், உயிர்த்தெழுதலின் நம்பிக்கை அவருக்குள்ளிருந்ததினால், இது வந்தது. பிரேதக்குழியிலுள்ளவர்கள், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் என்கிற விசுவாசம். கிறிஸ்து வரும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள், என்கிற விசுவாசம்.
யோசேப்பு மரித்து, ஏறக்குறைய நானூற்று முப்பது வருடங்கள் ஓடி மறைந்தன. ஆனாலும், அந்த அபிஷேகமும், அக்கினியும், அவருடைய எலும்புகளுக்குள் பற்றியெரிந்து கொண்டேயிருந்தது. “நான் உயிர்த்தெழுவேன். முற்பிதாக்களோடு பரலோகம் செல்லுவேன்,” எத்தனையோ தலைமுறைகள் கடந்து போனாலும், யோசேப்பின் எலும்புகளைக் குறித்து, அவருடைய சகோதரர்களின் வாக்குறுதியை, பின்வந்த சந்ததியார் மறந்துவிடவில்லை.
கர்த்தர் இஸ்ரவேலரை சந்தித்தபோது, யோசேப்பின் எலும்புகளை எடுத்துக் கொண்டு கானானை நோக்கிப் பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்கள். முன்னால் மரித்த எலும்புகள், பின்னால் உயிரோடுள்ள இஸ்ரவேலர்கள். கர்த்தருடைய வருகையும் அப்படித்தானேயிருக்கும்? “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு நாமும்,” என்று அப். பவுல் குறிப்பிடுகிறதை 1 தெச. 4:16-ல் வாசிக்கிறோம்.
யோபு பக்தனுடைய விசுவாசமும், அதுவாகத்தானிருந்தது. நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் சொல்லுகிறார், “இந்த என் தோல்முதலானவை, அழுகிப் போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:26,27).
தேவபிள்ளைகளே, உங்களுடைய விசுவாசம் என்ன? கர்த்தர் உங்களுடைய உள்ளத்தில் வைத்திருக்கிற உறுதியான நம்பிக்கை என்ன? அதை, ஆவியானவரோடு இணைத்துவிடுங்கள். விசுவாசத்தினாலே, “என்னுடைய ஓட்டம் வெற்றியோடு முடியும். கர்த்தர் என்னை வழுவாது பாதுகாத்து, தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே, மாசற்றவனாய் நிலைநிறுத்துவார்,” என்று சொல்லுங்கள்.

நினைவிற்கு:- “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” (1 கொரி. 16:13).