அவிசுவாசியும், அற்ப விசுவாசியும்!

“அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக் குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?” (மத். 16:8).

ஒரு போதகர், வருடந்தோறும், பெரிய அளவில் கன்வென்ஷன் கூட்டங்களை நடத்துவதுண்டு. ஒரு வருஷம் ஆண்டவரைப் பார்த்து, “ஆண்டவரே, கன்வென்ஷன் கூட்டத்திற்கு வருகிற மக்களுக்கு, கடைசி நாளில் நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். அதற்கு எனக்கு இரண்டு நல்ல கொழுத்த காளை மாடுகளை தந்து, உதவிச்செய்யும்” என்று கேட்டு உறுதியாய் ஜெபித்தார். மட்டுமல்ல, “நீர் கொடுக்கப்போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லி துதித்தார்.
கன்வென்ஷன் கூட்டம் ஆரம்பமாயிற்று. ஆனால், காளை மாடுகளோ வரவில்லை. கடைசி நாள் கூட்டத்திற்கு இடையே, இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்தன. “என்ன செய்வது?” என்று, அவர் அங்கலாய்த்தார். அப்பொழுது அவருடைய மூப்பர் வந்து, “ஐயா, உங்களுடைய விசுவாசம், சரியானதல்ல. உங்களுடைய கையில்தான் கர்த்தர் பணம் கொடுத்திருக்கிறாரே. அதை வைத்துக் கொண்டு நீங்கள் காளை மாடுகளை வாங்கலாம் அல்லவா? பணமில்லாவிட்டால், கர்த்தர் தருவார் என்று விசுவாசத்தோடு இருக்கலாம்” என்று சொன்னார்கள்.
அதைக் கேட்டதும், போதகருடைய உள்ளம் சலனமடைந்தது. அவருடைய விசுவாசம் தள்ளாடினது. இடையே, அதிக கால அவகாசமுமில்லை. ஆகவே மூப்பர் சொன்னதைக் கேட்டு, பணம் கொடுத்து, இரண்டு காளை மாடுகளை வாங்கி விட்டார். எல்லாரும் திருப்தியாய் சாப்பிட்டார்கள். ஆசீர்வாதமாய் கூட்டம் முடிந்தது. அன்று இரவு, கர்த்தர் அவருக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஒரு பெரிய மலைப்பாங்கான பகுதியிலே, இவர் நடந்துச் சென்றபோது வழியிலே, பெரிய மலைப்பாம்பு ஒன்று படுத்துக்கிடந்தது. அந்த பாம்பின் வயிற்றை அவர் கூர்ந்து பார்த்த போது, வெளியே கண்ணாடி போல தெரிந்தது. உள்ளே இரண்டு காளை மாடுகள், விழுங்கப்பட்டிருக்கிறதைக் கண்டார்.
அது என்னவென்று தெரியாமல், அவர் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஆவியானவர் பேசினார். “மகனே, நீ ஜெபம்பண்ணினவுடனே, உனக்கு இரண்டு காளை மாடுகளை, நான் கட்டளையிட்டுவிட்டேன். அவைகள் உன்னிடத்தில் வந்து கொண்டிருந்தன. ஆனால் நீயோ, மூப்பர் சொன்ன, அவிசுவாசமான வார்த்தைகளைக் கேட்டு, வீண் செலவு செய்து, பணம்கொடுத்து காளை மாடுகளை வாங்கினாய். பார்! நான் உனக்கு அனுப்பி வைத்த மாடுகளை, சந்தேக சாத்தான் விழுங்கிவிட்டான். நீ விசுவாசத்தை இழந்துவிட்டாய்” என்றார்.
அநேகம் பேர் என்ன எண்ணுகிறார்கள்? விசுவாச ஜீவியத்தில், “கர்த்தர் கடைசி வரை இழுத்தடிப்பார்” என்கிறார்கள். வேறு சிலர், “விசுவாச ஜீவியத்தில் சென்றால், பாடுகளும், உபத்திரவங்களும்தான் வரும். அது கடினமான பாதை. முழுக்க முழுக்க ஆண்டவரை விசுவாசத்தில் எப்படி சார்ந்திருக்க முடியும்?” என்று கேட்கிறார்கள். ஆனால் வேத வசனம் சொல்லுகிறது. “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19). தேவபிள்ளைகளே, விசுவாச பாதையிலே, உங்களை பயமுறுத்தவும், சோர்ந்து போகப்பண்ணவும், சாத்தான் முயற்சிப்பான். கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள், சோர்ந்துபோகமாட்டார்கள். நீங்கள் ஜெபிக்க ஜெபிக்க, தடைகள் விலகும். போராட்டங்கள் அகலும். நீங்கள் ஜெபிக்கும்போது, மலைபோன்ற பிரச்சனைகள், பனிபோல நீங்கிவிடும்.

நினைவிற்கு:- “சுதந்தரமானது, கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு, அது விசுவாசத்தினாலே வருகிறது” (ரோம. 4:16).