விசுவாசமும் ஜெபமும்!

“ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற். 11:24)

.
“விசுவாசம்,” என்பது, ஒரு கருவை வயிற்றிலே சுமந்துகொண்டிருக்கும், தாய்க்கு ஒப்பானது. அது வெளியே தெரியாது. நீங்கள் ஊக்கமாய் ஜெபித்து முடித்ததும், கர்த்தர் உத்தரவு அருளிவிட்டார் என்பது உங்களுடைய உள்ளத்தின் ஆழத்திலே ஒரு கருவைப் போல உணருவீர்கள். கர்த்தர் நிச்சயமாய் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்படும். இதை நீங்கள், உங்கள் மாம்ச கண்களால் காணாமலிருந்தாலும், உங்கள் ஆவியில், உணருவீர்கள்.
வயிற்றிலிருக்கும் குழந்தையை, உடனடியாக மற்றவர்களால், பார்க்க முடிவ தில்லை. ஆனால் ஒரு காலம் வரும். குழந்தை பூரண வளர்ச்சியுடன் பிறக்கும். அப்பொழுது தாய் மட்டுமல்ல, எல்லோரும் அதைக் காண முடியும். அப்படியே கர்த்தர் வாக்குப்பண்ணினதை, நீங்கள் பெற்றுக்கொள்ள தாமதமானாலும், விசுவாசத்தோடு காத்திருங்கள். கர்த்தர் ஏற்ற வேளையிலே, அதைக் காண உங்களுக்கு உதவிச் செய்வார்.
ஒரு முறை ஒரு தகப்பன், பிசாசு பிடித்த தன் மகனை அழைத்துக்கொண்டு கிறிஸ்துவண்டை வந்தார். இயேசு கிறிஸ்து, அந்த தகப்பனைப் பார்த்து, “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்” (மாற்கு 9:23). நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம். உங்களுடைய எல்லா பிரச்சனைக்கும், போராட்டத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட வேண்டுமென்றால், விசுவாசமுள்ள ஜெபம், மிகவும் அவசியமாகும்.
அற்புதங்களைப் பெற, உங்களுடைய விசுவாச ஜெப ஜீவியத்தைக் கட்டி எழுப்புங்கள். பாரம்பரியமும், சடங்காச்சார ஜெபங்களும், உங்களுக்கு வேண்டாம். எழுதி வைத்து வாசிக்காதிருங்கள். அவை யாவும் மணலின்மேல் கட்டப்பட்ட வீடாகவே இருக்கும். ஆனால் கன்மலையாகிய கிறிஸ்துவின் வசனத்தின்மேல், ஆழமாக அஸ்திபாரமிட்டிருப்பீர்களானால், உங்களுடைய விசுவாசம் உறுதியாய் நிற்கும். எவ்வளவு புயலடித்தாலும், வாழ்க்கை கொந்தளித்தாலும், அது ஒருபோதும் உங்களை சேதப்படுத்த முடியாது. விசுவாசத்தோடு ஜெபிக்கிறவர்கள், ஒருநாளும் சோர்ந்துபோவதில்லை. ஊக்கமாய் ஜெபித்தபிறகு, பதில் வருகிற வரையிலும் விசுவாசத்தோடும், எதிர்பார்ப்போடும், கர்த்தரைத் துதித்துக்கொண்டேயிருங்கள். “சோர்ந்துபோகாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று லூக். 18:1-ல் இயேசு கிறிஸ்து சொன்னார் அல்லவா?
உலகப்பிரகாரமான கடைக்குச் சென்றால், பணம் கொடுத்து பொருட்கள் வாங்குகிறோம். ஆனால் பரலோக கடைக்குச் சென்றால், உலகப் பணமெல்லாம் செல்லுபடியாகாது. பரலோகத்துக்கு பணமாயிருப்பது, “விசுவாசமேயாகும்.” விசுவாசத்தின் மூலமாகத்தான், கர்த்தரிடத்திலிருந்து நீங்கள், எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவபிள்ளைகளே, விசுவாசித்து ஜெபியுங்கள். ஜெபித்த பிறகு பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரம் செய்யும்போது, விசுவாசத்தில் நீங்கள் வல்லவர்களாய் மாறிவிடுவீர்கள். கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்ய வேண்டுமென்றால், விசுவாச ஜெபம் உங்களுக்கு இருக்கட்டும்.

நினைவிற்கு:- “அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (ஆதி. 15:6).