விசுவாசத்தினாலே உயிர்த்தெழுதல்!

“என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” (யோவா. 11:25).

விசுவாசத்தினாலே வரும், உயிர்த்தெழுதலைக் குறித்து, கிறிஸ்து இங்கே பேசுகிறார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன், மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும், என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக் கிறாயா என்றார்” (யோவா. 11:25,26).
இன்றைக்கு, அநேகர் மரணத்துக்கப்பாலுள்ள வாழ்க்கையைக் குறித்து, நம்புகிறதில்லை. விசுவாசிக்கிறதில்லை. அவர்களுக்கு நித்தியத்தைக் குறித்த எண்ணமேயில்லை. ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்திலே, உயிர்த்தெழுதல் உண்டு. மரணத்திற்குப் பிறகு, நித்திய மகிழ்ச்சியான பரலோகமுண்டு. பாவியாய், துன்மார்க் கர்களாய், தங்கள் ஓட்டத்தை முடிக்கிறவர்களுக்கு, நித்திய நியாயத்தீர்ப்பு உண்டு. பாதாளமும், அக்கினி கடலும் உண்டு.
இரண்டாம் வருகையிலே, கிறிஸ்து எக்காள சத்தத்தோடு வரும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள் (1 தெச. 4:16). பிரேதக் குழியிலுள்ளவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். “இதோ, ஒரு இரகசியத்தை, உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப் படுவோம்” (1 கொரி. 15:51).
உலக ஞானிகள் என்ன நம்புகிறார்கள்? தாங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு வினாடி நேரமும், தங்களுடைய கல்லறையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்கள். பூமியிலே புதையுண்டுபோய், தங்களுடைய சரீரம் புழுக்களால் அரிக்கப்படுகிற நிலைமையை நம்புகிறார்கள். எங்கும் அசைய முடியாதபடி மண்ணிலே உறங்கப்போவதாக நம்புகிறார்கள். விசுவாசிக்கிற நமக்கோ, ஒரு அருமையான, மேன்மையான எதிர்பார்ப்பு உண்டு. நம்முடைய விசுவாசம் என்ன? “எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும், மறுரூபமாக்கப்படுவோம்” (1 கொரி. 15:52).
“மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும். அழிவில்லாததாய் எழுந்திருக்கும். கனவீனமுள்ளதாய் விதைக்கப் படும். மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும். பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும். ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்” (1 கொரி. 15:42-44).
உங்களைக் குறித்து, தேவனுக்கு ஒரு மகிமையான எதிர்பார்ப்பு உண்டு. ஆண்டவராகிய இயேசு சொன்னார், “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவா. 11:40). “நாமெல்லாரும், திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால், அந்தச் சாயலாகத்தானே, மகிமையின்மேல் மகிமையடைந்து, மறுரூபப் படுகிறோம்” (2 கொரி. 3:18).
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. அவர் பிதாவின் மகிமைப் பொருந்தினவராய் வருகிற நேரம் இது. மகிமையான தேவதூதர்களோடு கர்த்தர் வரும்போது, நீங்கள் விசுவாசத்தினால், அவருடைய மகிமையைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” (1 கொரி. 16:13).