விசுவாசமே ஜெயம்!

“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4).

விசுவாசத்துக்கென்று கர்த்தர், எபி. 11-ஆம் அதிகாரத்தையே எழுதி வைத்திருக் கிறார். உங்களை அறியாமல், விசுவாசம் ஒரு நீரூற்றுபோல, உங்கள் உள்ளத்திலே சுரந்து வரும். கர்த்தருடைய நாமத்திலே, பெரிய பெரிய திட்டங்கள், தரிசனங்கள் உங்களுக்கு உண்டாகும். ஆகவே, கர்த்தருக்காக, பெரிய காரியங்களைத் திட்டமிடுங்கள். பெரியவற்றை செய்து முடியுங்கள்.
சாலொமோன், “என் தேவன் பெரியவர். அவர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும், பெரியவர். அவருக்காக நான் கட்டுகிற ஆலயமும், பெரியதாயிருக்கும்” என்று சொன்னது போல, கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்யும்படி உங்கள் உள்ளத்திலே ஏவி எழுப்பப்படுவீர்கள்.
இந்த விசுவாச ஆவி, வில்லியம் கேரி, என்ற பக்தனுக்குள்ளிருந்தபடியால், மிஷனெரியாக, இந்தியாவுக்குக் கடந்து வந்தார். கர்த்தரிடத்திலிருந்து, பெரிய காரியங்களை எதிர்பார்த்தார். இந்தியாவில், ஒரு மொழி படிப்பதே கஷ்டமான சூழ்நிலையாயிருந்த, அந்த நேரங்களில், விசுவாசத்தினாலே அவர் அநேகம் இந்திய மொழிகளை கற்று, அதிலே பாண்டியத்துவம் பெற்று, வேதாகமத்தை மொழிபெயர்த்தார். வில்லியம் கேரி, விசுவாசத்தினால், அரிய பெரிய காரியங்களை செய்து முடித்தார். ஏழ்மை நிலைமையில், செருப்புத் தைத்துக்கொண்டிருந்த அவர், தனது பெயரில் பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவி விட்டாரென்றால், இது விசுவாசத்தினாலேயல்லாமல், வேறு எந்த விதத்தில் சாத்தியமாகும்?
விசுவாசத்தை செயல்படுத்துகிறவர்கள், கர்த்தரை சர்வ வல்லவராய் காண்கிறார்கள். மகா பெரியவராய் மகிமையும், மகத்துவமும், நிறைந்தவராய் காண்கிறார்கள். சிருஷ்டிக் கர்த்தராய், பெரிய அற்புதங்களைச் செய்கிறவராய்க் காண்கிறார்கள். மட்டுமல்ல, கர்த்தரையே முழுவதுமாக சார்ந்துகொள்ளுகிறார்கள்.
தேவன் உங்களுக்குக் கொடுக்கிற, விசுவாசத்தோடேகூட, உங்கள் விசுவாச அறிக்கையையும் ஒன்றாய் சேர்த்துக்கொள்ளுங்கள். பாருங்கள்! விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டன (எபி. 11:3). வெறும் விசுவாசம் மட்டுமல்ல, கர்த்தருடைய வார்த்தையும், அங்கே இணைந்திருந்தது. “உண்டாகக்கடவது” என்று கர்த்தர் சொன்னபோது, கோடி கோடி டன் எடையுள்ள அக்கினி பிளம்பான சூரியன் உண்டானது. சந்திரன், நட்சத்திரங்கள் உண்டானது. காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும், அண்டசராசரங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. அடுத்து, கர்த்தருடைய விசுவாசம் என்ன? தான் சிருஷ்டித்தவைகளெல்லாம் நல்லது என்று கண்டார்.
தேவனுடைய விசுவாசத்தின்படி, தேவன் தாமே, உங்களை தன்னுடைய சாயலிலேயே, தன்னைப்போலவே, சிருஷ்டித்தார். அவருடைய ரூபத்தை உங்களுக்குக் கொடுத்தாரென்றால், அவருடைய விசுவாசமும் உங்களுக்குள் இறங்கி வரவேண்டும், அல்லவா?
அப். பவுல், கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்தது எப்படி? பல தேசங்களுக்கு பிரயாணம் செய்து, ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தது எப்படி? கர்த்தர். அப். பவுலின் கரத்தைக் கொண்டு, விசேஷ அற்புதங்களை செய்த தினால் அல்லவா? நீங்களும், கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்வீர்கள்.

நினைவிற்கு:- “நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. இந்த நல்மனச் சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” (1 தீமோத். 1:18,19).