விசுவாச வரம்!

“வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், அளிக்கப்படுகிறது” (1 கொரி. 12:9,10).

மூன்று வரங்களை, நாம் “வல்லமையின் வரங்கள்” என்று அழைக்கிறோம். அந்த வரங்கள், ஜனங்களை கர்த்தரண்டை இழுக்கின்றன. புறஜாதிகளை, கர்த்தருடைய நாமத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுகின்றன. அற்புதமும், அடையாளமும், ஆரோக்கியமும் உண்டாக்குகிறது. முதலாவதாக, விசுவாச வரம். இரண்டாவதாக, சுகமளிக்கிற வரம். மூன்றாவதாக, அற்புதங்களைச் செய்கிற வரம்.
மனுஷருக்குரிய, விசுவாசமுமுண்டு. தெய்வத்துக்குரிய, விசுவாசமுமுண்டு. கர்த்தரிடமிருந்து வருகிற, இந்த மகிமையான விசுவாச வரத்தின், ஒரு பகுதியை கர்த்தர் இந்த வரத்தின் மூலமாக, உங்களுக்குத் தருகிறார். அப்போது உங்களுடைய உள்ளத்தில், கர்த்தர் எனக்கு இதை செய்வார் என்ற, பலத்த விசுவாசம் வந்துவிடும்.
கர்த்தர் ஒரு விசுவாச வீரன். அவரிடம் முழுக்க முழுக்க, பூரணமான விசுவாசம் ததும்பிக்கொண்டிருக்கிறது. சிருஷ்டிக்க வேண்டுமானாலும் சரி, பாதுகாக்க வேண்டுமானாலும் சரி, அவர் தம்முடைய விசுவாசத்தைப் பயன்படுத்துகிறார். அந்த விசுவாசத்தின் மூலமாகத்தான், அவர் உலகங்களை சிருஷ்டித்தார் (எபி. 11:3). தேவபிள்ளைகளே, விசுவாசமாகிய தெய்வீக சுகத்தை, கர்த்தர் இந்த வரத்தின் மூலமாக, உங்களுக்குத் தர விரும்புகிறார். “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்றார் (மாற். 9:23).
“கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம்விட்டு அப்புறம்போ என்று சொல்ல, அது அப்புறம் போம். உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது” (மத். 17:20). “நீங்கள் சந்தேகப்படாமல், விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை, நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ, என்று சொன்னாலும், அப்படியாகும்” (மத். 21:21).
“என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவா. 14:12). “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (யோவா. 20:29) என்றெல் லாம் அருமை ஆண்டவர் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு இந்த விசுவாசம், உங்களில் ஆரம்பமாகட்டும். விசுவாச வரம், உங்களில் செயல்படட்டும். விசுவாசத் தால் ஆண்டவருக்காக, அரிய பெரிய காரியங்களை செய்யும்படிக்கு, விசுவாசத்தைத் துவக்குகிற, தேவனுமாகிய கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவரே, உங்களுடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறார் (எபி. 12:1,2).
போதகர் பால்யாங்கிசோ, அதிகாலையில் எழும்பி ஜெபித்து, கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை தியானிக்க, தியானிக்க, கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்கிற பெரிய விசுவாசம் அவருக்குள்ளே வருமாம். அப்பொழுது, தன்னால் சாதாரணமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத, பெரிய திட்டங்களை, கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொள்வாராம்.
ஒரு தாயின் வயிற்றில் கரு உண்டாகி, வளருவதுபோல, அவருக்குள்ளேயிருந்து, மாபெரும் ஆலயத்திட்டம், விசுவாசத்தினாலே வளர்ந்துகொண்டேயிருந்தது. தமது விசுவாசத்தின்படியே, மிகப்பெரிய ஆலயத்தை அற்புதமாக கட்டி முடித்தார். தேவபிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தை செயல்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “நான் விசுவாசித்திருக்கிறவர், இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று, நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோத். 1:12).