விசுவாசத்தின் பூரணம்!

“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே” (யாக். 2:22).

அடிப்படை விசுவாசமுமுண்டு. அஸ்திபார விசுவாசமுமுண்டு. அதே நேரத்தில், பூரண விசுவாசமுமுண்டு. விசுவாசத்தினாலே, ஆண்டவர் உலகங்களை சிருஷ்டித்தார். அது நிறைவேறினது. “வானமும், பூமியும் ஒழிந்துபோம், வார்த்தைகளோ, ஒழிந்துபோவதில்லை” (மத். 24:35).
ஆரம்ப விசுவாசம் என்றால் என்ன? “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1). அஸ்திபார மான உபதேசம் என்ன? அது முற்றிலும் தேவனையே சார்ந்துகொள்வதாகும் (எபி. 6:1-3). கர்த்தர் மேலேயே, நம்பிக்கை வைத்து, இளைப்பாறுவது. எதையுமே கர்த்தர் செய்வார் என்ற பாரத்தை அவர்மேல் வைத்துவிடுவது. பூரண விசுவாசம், நூற்றுக்கு நூறு கிறிஸ்துவையே சார்ந்து, அவரில் என்ன விசுவாசம் இருக்கிறதோ, அதை சுதந்தரித்துக்கொள்வதாகும்.
உதாரணமாக, விசுவாசிகளின் தகப்பனாகிய, ஆபிரகாமைப் பாருங்கள்! அவருக்குள் விசுவாசமிருந்தது. கர்த்தரை சார்ந்துகொண்டார். “நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்குப் புறப்பட்டுபோ,” என்று கர்த்தர் சொன்னபோது, அந்த வார்த்தையை, நூற்றுக்கு நூறு விசுவாசித்து, கீழ்ப்படிந்து, அந்த தேசம் எது, என்று அறியாமலேயே புறப்பட்டுப்போனார். அவருடைய விசுவாசம் என்ன? என்னை அழைத்தவர், உண்மையுள்ளவர். என்னை நடத்துவார் என்கிற விசுவாசம். புறப்பட்டுப்போன அந்த கிரியையும், கர்த்தர்மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையாகிய விசுவாசமும், அவருக்குள் பூரணப்பட்டது.
ஆபிரகாமுக்கு ஒரு குழந்தைகூட இல்லாத சூழ்நிலையில், உன்னை அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினேன். உன்னுடைய கர்ப்ப பிறப்பு, பூமியின் தூளைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், வானத்து நட்சத்திரங்களைப் போலவும் இருக்கும், என்று கர்த்தர் சொன்னதை, அப்படியே விசுவாசித்தார். தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை, நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தார் (ரோம. 4:17,18).
வேதம் சொல்லுகிறது, “அவன் விசுவாசத்திலே, பலவீனமாயிருக்கவில்லை. அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து, அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை, நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று, முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” (ரோம. 4:19-22).
ஒரு டாக்டர் மிகவும் சுகவீனமாகி, மரணத்தருவாயில் இருந்தார். அப்பொழுது கர்த்தர் அவருக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, “உன்னுடைய ஆயுசை நான் நீடிக்கப்பண்ணுவேன்” என்று சொன்னார். கர்த்தர் கொடுத்த அந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, ஸ்தோத்திரம்பண்ண ஆரம்பித்ததினால், தேவனுடைய வல்லமை அவர்மேல் இறங்கிற்று. அப்படியே அவர் தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொண்டார். தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங் களை, உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள். அவை, ஆம் என்றும், ஆமென் என்றும், நிச்சயமாய் நிறைவேறும்.

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே, ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே, அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்” (எபி. 11:4).