விசுவாசசத்தினாலே பிரியம்!

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி. 11:6).

இந்த உலகத்தில் வாழும்போது, கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற, வாஞ்சை உங்களுக்கு இருக்கும். நல்லதுதான். ஆனால், ஆண்டவருக்குப் பிரியமானது என்ன? என்று, அறிந்து செய்வது மிகவும் அவசியமானது. “ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6).
ஒரு பிரசித்திப் பெற்ற ஊழியக்காரர், மரித்துப்போகிற நிலைமையிலே, இருந்தார். அவரை சூழ, குடும்பத்தார் மட்டுமல்ல, அநேக ஊழியக்காரர்களும், மூப்பர்களும், பாடிக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள். திடீரென்று அவருக்கு உயிர் போய், ஏறக்குறைய பத்து நிமிட நேரத்தில், திரும்பவும் உயிர் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்து கேட்டார்கள், “உங்கள் உயிர்போய் திரும்ப வந்துவிட்டீர்கள். கர்த்தர், தேவதூதர்களோடு, கிரீடங்களோடு உங்களை வந்து சந்தித்தாரா?” என்று கேட்டார்கள்.
ஆனால், அவர் துக்கத்தோடு சொன்னார், “இல்லை, கர்த்தர் என்னைக் குறித்து சந்தோஷப்படவில்லை. “மகனே, நீ ஏராளம் ஊழியம் செய்தாய். அநாதை இல்லங் களையும், வேதாகமக் கல்லூரிகளையும் நிறுவினாய். கடினமாய் உழைத்தாய். ஆனால் எனக்குப் பிரியமானதையோ, நீ செய்யவில்லை. என்னுடைய விருப்பம் என்ன? என்பதை நீ உணரவில்லை. ஊழியம் என்று, தகாதவற்றில் தலையிட்டு, உன் நேரத்தை வீணாக்கினாய். உன்னைக் குறித்து துக்கப்படுகிறேன்” என்றார்.
அனைவருடைய உள்ளத்தையும் அது தொட்டது. நீங்கள் மேன்மையான உயிர்த்தெழுதலில் பங்குபெற வேண்டுமென்றால், “எது கர்த்தருக்குப் பிரியமானது? எதிலே தலையிடக்கூடாது?” என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு சில ஊழியங்கள்மேல் அழைப்பு இருக்கும். சிலர் வெளிநாட்டிலிருந்து பணம் கொண்டு வருவதற்காக, அநாதை இல்லங்களை நிறுவி, ஒரு பிள்ளைக்கு இவ்வளவு வேண்டும் என்று வசூலிப்பார்கள்.
சிலர் வேதாகமக் கல்லூரி வைத்திருக்கிறேன் என்று கஷ்டப்பட்டு நடத்தி கடனுக் குள்ளாவார்கள். இதனால் கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதமும், தேவ கிருபையும் போய்விடுகிறது. ஒருவர், திருமணம் ஆகாத வாலிபப் பிள்ளை களுக்கு,”திருமண தொடர்பு மையம்” என்று வைத்து, நடத்தினால் என்ன? என்று திட்டமிட்டார். வெளித்தோற்றத்திற்கு அது மிகவும் நன்றாகத் தெரிந்தது. ஆனால் கர்த்தர் சொன்னார், “சுவிசேஷ பாரம் ஒன்றுதான் உனக்கு இருக்க வேண்டும். சமூக சேவை செய்ய நான் மற்றவர்களுக்கு, கிருபைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் செய்வார்கள். திருமணம் என்று வரும்போது, அதிலே நகை, ரொக்கம், சொத்து, ஜாதி, உடல் அழகு என்பதெல்லாம் உள்ளே மறைந்து கிடக்கும். உனக்கு அது வேண்டாம், நீ என்னைப் பின்பற்றிவா” என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, கொஞ்சக்கால வாழ்க்கை, கர்த்தரைப் பிரியப்படுத்தவே வாழுங்கள். எப்போதும் உங்களுடைய கண்களை பரலோகத்துக்கு நேராய் ஏறெடுத்து அப்பா இந்த காரியம் உமக்கு சித்தமா? நான் செல்லுகிற இடத்திற்கு நீர் வருவீரா? என்னுடைய செயலில் நீர் சந்தோஷப்படுவீரா? என்று கேட்டு செய்யுங்கள். தேவ சித்தம் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே, நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள், தோன்றப்படுகிறவை களால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்” (எபி. 11:3).