அவிசுவாசம் நீங்கட்டும்!

“இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்” (மாற். 9:23).

ஒரு தகப்பன், ஊமையான ஒரு ஆவி பிடித்த, தன் மகனை இயேசுவிடம் கொண்டு வந்தான். “அது அவனை எங்கே பிடித்தாலும், அங்கே அவனை அலைக்கழிக்கிறது. அவன் நுரை தள்ளி, பல்லைக் கடித்து சோர்ந்துபோகிறான்” என்று சொன்னான். மட்டுமல்ல, இவனை கொல்லும்படிக்கு, அநேகந்தரம் தீயிலும், தண்ணீரிலும் தள்ளிற்று என்றான்.
பாருங்கள்! அந்த ஆவி, அவனை ஊமையாக்கி வைத்திருந்தது. அநேகர் கர்த்தரைக் குறித்து, சாட்சி கொடுக்க வேண்டிய நேரத்தில் ஊமையாக இருந்துவிடுகிறார்கள். இயேசுவைப் பற்றி சொன்னால், “அடி உதை விழும். நமக்கு ஏன் இந்த வம்பு?” என்று எண்ணியிருந்திருக்கலாம்.
இரண்டாவது, அவனை அலைக்கழிக்கிறது. “ஆற்றில் ஒரு கால். சேற்றில் ஒரு கால்”, என்பதுபோல, நிலையான கிறிஸ்தவ ஜீவியம் செய்ய விடாதபடி, அலைக்கழித்துக்கொண்டேயிருக்கிறது. கடலில் அலைகள் மாறி, மாறி வருவது போல, அவனுடைய வாழ்க்கையிலும் பிரச்சனைமேல் பிரச்சனை வருகிறது.
மூன்றாவது, அவன் சோர்ந்துபோகிறான். தீயிலும், தண்ணீரிலும் தள்ளுகிறது. அக்கினி சூடானது. தண்ணீர் குளிர்ச்சியானது. அவன் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் வாழுகிற, பரிதாபமான நிலைமைக்கு தள்ளப்படுகிறான். இரண்டு நினைவுகளினால், குந்திக் குந்தி நடக்கிற ஒரு வாழ்க்கை. இயேசு சொன்னார், உன் மகனுக்கு என்ன போராட்டமிருந்தாலும், “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு, எல்லாம் கூடும்” என்றார் (மாற். 9:23). நான் விடுவிக்க வல்லவர், என்று விசுவாசிக்கிறாயா? நான் சாத்தான்மேல் ஜெயங்கொடுக்கிறவர் என்பதை விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால், பிசாசின் பிடியிலிருந்து, உன்னுடைய மகன் விடுதலையாக்கப்படுவான்” என்றார்.
சிலர், அற்பவிசுவாசிகளென்றும், சிலர், அவிசுவாசிகளென்றும், அழைக்கப் படுகிறார்கள். “ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்” என்று அந்த தகப்பன் கண்ணீரோடு சத்தமிட்டு சொன்னான் (மாற். 9:23,24).
இன்னொருமுறை, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள் (லூக்.17:5). இந்த இடத்தில், விசுவாசம் ஒரு குறைவான அளவுதான் காணப்படுகிறது. பேதுருவுக்கு, ஒழிந்து போகக்கூடிய விசுவாசம்தான் இருந்தது (லூக். 22:31,32). பிசாசின் தந்திரம் என்னவென்றால், உங்களுடைய விசுவாசத்தை குறைத்து, குறைத்து, கடைசியில் ஒன்று மில்லாமற்போகும்படி, அவன் ஒழித்துவிடுவான். விசுவாசம் எப்படி வரும்? வேதம் சொல்லுகிறது, “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோம. 10:17).
தேவபிள்ளைகளே, உங்களுக்கு விசுவாசம் தேவை. வாக்குத்தத்தங்களைப் பிடித்துக் கொள்ளும்போது, உங்களுக்கு விசுவாசம் வரும். ஜீவனுள்ள சாட்சிகளையும், உயிர்ப்பிக்கிற சம்பவங்களையும் வாசிக்கும்போது, “அவர்களுக்கு உதவி செய்த ஆண்டவர், எனக்கும் உதவிச் செய்வார்,” என்கிற விசுவாசம் வரும். ஆம், “விசுவாசமுள்ள ஜெபம், பிணியாளியை இரட்சிக்கும்” (யாக். 5:15).

நினைவிற்கு:- “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள், உங்களை, நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரி. 13:5).