விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு!

“நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” (லூக். 22:32).

ஒரு பக்கம், சாத்தான் உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும் தகர்க்கும்படி போராடுகிறான். சோதனைக்குமேல் சோதனை, பிரச்சனைக்குமேல் பிரச்சனையை கொண்டு வருகிறான். இயேசு சீமோன் பேதுருவிடம், “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு, உத்தரவு கேட்டுக்கொண்டான்” என்றார் (லூக். 22:31).
ஒரு சிலர் சோதனையையும், போராட்டங்களையும் தாங்கமுடியாதபடி, “போதும், இந்த கிறிஸ்தவ மதம், போதும், இந்த வேத வாசிப்பு என்று சோர்ந்துபோகிறார்கள். கர்த்தரை விட்டுப் பின் வாங்குகிறார்கள். ஆனால், “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் (கர்த்தர்) பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” (ஏசா. 40:29).
உங்களுக்கு வரும், எல்லாப் போராட்டங்களிலும், பெரிய போராட்டம், உங்களுடைய விசுவாசத்துக்காக போராடும் போராட்டமாகும். “விசுவாசம் விலையேறப்பெற்றது. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்று இயேசு சொன்னார். விசுவாசத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், என்றெல்லாம் பிசாசு அறிந்திருக்கிறபடியால், அவன் முழு மூச்சோடு, உங்களுடைய விசுவாசத்துக்கு விரோதமாய்ப் போராடுவான். ஆனாலும் பரிசுத்தவான்கள், கர்த்தரை சார்ந்துகொண்டு, அந்தப் போராட்டங்களை, ஜெயத்தோடு மேற்கொள்ளுகிறார்கள்.
பேதுருவினுடைய விசுவாசத்திற்கு, ஒரு போராட்டம் வந்தது. கோதுமையை சுளகினால் புடைக்கிறதுபோல, பேதுருவை புடைக்கும்படி, சாத்தான் கர்த்தரிடத்தில் உத்தரவு கேட்டுக்கொண்டான். சாத்தான் சதி செய்வது, பேதுருவுக்குத் தெரியாது. ஆனால் கர்த்தரோ, பேதுருவுக்காக மட்டுமல்ல, இன்றைக்கு நமக்காகவும், ஜெபிக்கிறார். அன்றைக்கு நெகேமியாவுக்கு விரோதமாக, சாத்தான் எழும்பினான். ஆனால் கர்த்தரோ, நெகேமியாவின் பட்சத்தில் நின்று, எருசலேமின் மதில் சுவர்கள் கட்டியெழுப்பப்படும்படி, உதவி செய்தார்.
ஏன் சாத்தான் உங்களை சோதிக்க வருகிறான்? நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். உங்களைக் கொண்டு கர்த்தர் ஒரு எழுப்புதலைக் கொண்டு வருவார். உங்களைக் கொண்டு தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவார். ஆகவே, உங்களை சாத்தான் சோதிக்கிறான்.
சாத்தான், ஏன் பேதுருவை சோதித்தான்? அவனுக்கு தெரியும் பேதுருவைக் கொண்டு, கர்த்தர் மூவாயிரம், ஐயாயிரம், திரள் ஜனங்கள் என்று, கர்த்தர் இரட்சிக் கப்போகிறார். பேதுருவின் கைகளிலே, பரலோக ராஜ்யத்தின் திறவு கோல்களைக் கொடுத்துவிட்டார். பேதுருவின் மூலம், சபை மிகவும் வளர்ந்து பெருகப்போகிறது. பேதுருவின் நிழல்பட்டு, அநேகம் பேர் சொஸ்தமாகப்போகிறார்கள், என்று சாத்தானுக்குத் தெரிந்ததினாலே, பேதுருவை சோதனைக்குட்படுத்தினான்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலே போராட்டங்களையும், பிரச்சனைகளையும், சாத்தான் கொண்டு வருகிறானென்றால், கர்த்தர் உங்களை பயன்படுத்தப்போகிறார் என்பதே, அதன் அர்த்தமாகும். கர்த்தர் உங்களை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விடுவிப்பார். இரண்டு மடங்காக யோபுவை ஆசீர்வதித்தவர், உங்களுடைய துயர நாட்களை மாற்றி, நிச்சயமாய் அவர் அற்புதம் செய்வார்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம. 8:34).