காத்துக் கொண்டான்!

“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத். 4:7).

ஆவிக்குரிய வாழ்க்கையை, அப்.பவுல் மல்யுத்தத்திற்கு ஒப்பிடுகிறார். போராட்டத்துக்கு ஒப்பிடுகிறார். மட்டுமல்ல, ஓட்டப்பந்தயத்துக்கும் ஒப்பிட்டு எழுதுகிறார். அப். பவுல், “என் ஓட்டத்தை, நான் வெற்றியோடு ஓடி முடித்தேன்” என்று குறிப்பிடுகிறார். என்றைக்கு நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களோ, அன்றைக்கே இந்த ஆவிக்குரிய ஓட்டத்தை நீங்கள் ஓட ஆரம்பிக்கிறீர்கள்.
எதிர்த்து வருகிற உலகம், மாம்சம், பிசாசை ஜெயித்து, கர்த்தர் காட்டுகிற வழியிலே நீங்கள் ஓட வேண்டும். “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24).
உலகப்பிரகாரமான ஓட்டத்திலே, நூறு மீட்டர் ஓடலாம். அல்லது ஒரு மைல் தூரம் ஓடலாம். குறிப்பிட்ட எல்லை வரையிலும் ஓடுவார்கள். எல்லோருக்கும் பரிசு கிடைப்பதில்லை. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் மட்டுமே உண்டு.
ஆனால் ஆவிக்குரிய ஓட்டத்திலே, நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் ஓட வேண்டும். கடைசி மூச்சு இருக்கிறவரையிலும், ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதிலே ஒன்று, இரண்டு, மூன்று பேருக்கு பரிசு அல்ல, தங்களுடைய ஓட்டத்தை, வெற்றியோடு ஓடி முடிக்கிற அனைவருக்கும், பரிசு உண்டு. அது சாதாரணமான பரிசு அல்ல. “நீதியின் கிரீடம்”.
நீங்கள் ஓட ஆரம்பிக்கும்போது, மன உறுதியோடும், விசுவாசத்தோடும், குறிக்கோளோடும் ஓட வேண்டும். மனதிலே உறுதியான தீர்மானமும், பிரதிஷ்டை யுமிருந்தாலொழிய, ஓடுகிற உங்கள் தீர்மானத்தை, உலக பிரச்சனைகள் திசை திருப்பிவிடக்கூடும். எதிர்த்து வருகிற தடைகளை தாண்டி, கிறிஸ்து அழைத்த அழைப்பிலே, வெற்றியின் பாதையிலே, ஓட வேண்டும்.
எபி. 11-ம் அதிகாரம் முழுவதும், பழைய ஏற்பாட்டு விசுவாச வீரர்களைக் குறித்து எழுதியிருக்கிறது. ஜெயம் பெற்ற ஓட்டப்பந்தயக்காரர்களின் பெயர்கள், அங்கே காணப்படுகின்றன. அவர்களெல்லாம், நமக்கு முன்பாக தங்கள் ஓட்டத்தை ஓடி முடித்து, மேகம் போல நம்மை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஞானவான்கள், ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், நட்சத்திரங்களைப்போலவும், நம்மை சூழ்ந்திருக்கிறார்கள் (தானி. 12:3).
எபி. 11-ம் அதிகாரத்தை எழுதி விட்டு, அதன் தொடர்ச்சியாக எபி 12-ம் அதிகாரத்தை ஆரம்பிக்கும்போது, அப். பவுல், ஒரு அருமையான சத்தியத்தை எழுதுகிறார். “நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து” என்று குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் நியமித்திருக்கிற ஓட்டத்திலே, பொறுமையோடே ஓடக்கடவோம் என்றும், ஆலோசனை சொல்லுகிறார் (எபி. 12:1).
பழைய ஏற்பாட்டு, பரிசுத்தவான்கள் ஓடினார்கள். கிறிஸ்துவும் ஓடினார். அப். பவுலும் ஓடினார். கிறிஸ்துவே, இந்த ஆவிக்குரிய ஓட்டத்திற்கு, அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறார். ஆகவே, “வெற்றிபெறுவேன்” என்கிற விசுவாசத்தோடு, இந்த ஓட்டத்திலே, தொடர்ந்து ஓடுங்கள்.

நினைவிற்கு:- “ஒருவன் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிற வனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோம. 4:5).