ஒளியில் நடக்கிறான்!

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்” (யோவா. 12:46).

இயேசுவை காணாத, அல்லது விசுவாசியாதவன், இருளிலிருக்கிறான். ஆனால் அவரை விசுவாசிக்கிறவனோ, கிறிஸ்துவாகிய ஒளியை கண்டு, அந்த ஒளியிலே மகிழ்ச்சியோடு நடக்கிறான். நீங்கள் கர்த்தருடைய ஒளியில் நடக்க வேண்டும் என்பதற்காக, இயேசு இந்த உலகத்துக்கு மேசியாவாக வந்தார். பாவ இருளில் வாழுகிறவர்களை, மகிமையான வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்.
கிறிஸ்துவாகிய, “மகிமையை கண்டவர்கள்,” அமைதியாக இருக்க முடியாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னபடியே, நீங்கள் ஜனங்களை வெளிச்சத்தண்டை நடத்துவீர்கள். “எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:1,2).
கர்த்தர் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தபோதிலும், “பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர், ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” (ஆதி. 1:2).
இந்த உலகத்திலே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உருவாக்கும் முன்னால், முதலாவது உண்டாக்கினது, வெளிச்சம். அந்த வெளிச்சம், கிறிஸ்துவின் முகத்திலிருந்து தோன்றியதாகும். “நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே, அதைப் பிரகாசிப்பித்தது” (வெளி. 21:23)
அந்த வெளிச்சம், உங்களுடைய உள்ளத்தில், வீசும்போது, இருள் நீங்கும். ஒழுங்கீனங்கள் மாறி, ஒழுங்குகள் ஏற்படும். வெறுமை மாறி, நிறைவும் செழிப்பும் உண்டாகும். இருள், எப்போதுமே சாத்தானோடு இணைந்ததாகும். அவன் “அந்தகார லோகாதிபதி,” என்று அழைக்கப்படுகிறான். தேவனுடைய மகிமை, உங்களுக்குள் வரும்போது, அந்த வெளிச்சத்தினால், பிசாசு அங்கே இருக்கவே முடியாது. சூரியனைக் கண்ட பனிபோல அவன் நீங்கிப்போய் ஓடி விடுவான்.
முன்பு நீங்கள் இருளாயிருந்தீர்கள். பிசாசின் அந்தகாரத்துக்குட்பட்டவர் களாயிருந்தீர்கள். இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பாயிருந்தீர்கள். அப். பவுல் சொல்லுகிறார், “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற, பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்” (கொலோ. 1:13).
எப்படி இந்த பூலோக ராஜ்யம் என்பது உண்மையோ, அதேபோல அன்பின் குமாரனுடைய ராஜ்யம் என்பதும், உண்மையாகும். முதலாவது நீங்கள் இருளின் அந்தகாரத்திலிருந்து, விடுதலையாக வேண்டும்.
இஸ்ரவேலரை, எகிப்து தேசத்திலிருந்து விடுதலையாக்கி, கானானுக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு மோசேயை அனுப்பினார். அது போல, இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை, நம்முடைய மத்தியிலே அனுப்புகிறார். அவர் உலகத்திலே வந்து, எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாயிருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவின் வெளிச்சத்துக்குள், இருக்கிறீர்களா? அவரது மகிமை, உங்களை சுற்றிலும் பிரகாசிப்பதாக.

நினைவிற்கு:- “கர்த்தராகிய தேவரீர், என் விளக்காயிருக்கிறீர், கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமு. 22:29).