விசுவாசமுள்ளவனாயிரு!

“பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்” (லூக். 8:50).

பயமும், கலக்கமும், ஒரு மனிதனை அவிசுவாசியாக்கும். ஆனால் கர்த்தருடைய வார்த்தையும், வாக்குத்தத்தங்களும், அவனை விசுவாச வீரனாய் மாற்றும். இந்த பகுதியிலே, யவீரு, சுகவீனமாயிருக்கிற தன் மகளை குணமாக்கும்படி, இயேசுவை வேண்டிக்கொண்டான். அவள் மரண அவஸ்தையால், வேதனைப்பட்டுக்கொண் டிருந்தாள். இயேசுவோ, மனதுருகி, அவனுடைய வேண்டுகோளை ஏற்று, அவனுடைய வீட்டுக்குச் சென்றார்.
போகிற வழியிலே, திரள் கூட்டம் அவர்களுக்குப் பின் சென்றது. ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீ, அவருக்கு பின்னே வந்து, வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்டாள். அவள் குணமானாள். ஆனால், நேரம் கடந்து கொண்டிருந்தபடியால், அது யவீருக்குள், பதட்டத்தைக் கொண்டு வந்தது. இன்னும் தூரமிருக்கிறது. என் மகள் நிலை என்னவாகுமோ? எப்படியிருக்குமோ? தெரியவில்லை. ஏன் தான் வீட்டிற்குப் போகிற வழியில் இவ்வளவு தடங்கல் என்று எண்ணினார். அப்பொழுது ஒருவன் வந்து, “உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை, வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்” (லூக். 8:49).
இந்த வார்த்தையைக் கேட்ட, யவீருவினுடைய முகம் செத்துப்போனது. உள்ளம் காற்றுபோன பலூன்போல, மாறிவிட்டது. நம்பிக்கையிழந்ததினால், அவிசுவாசம் காரிருளைக் கொண்டு வந்து, ஆத்துமாவை கவ்விக்கொண்டது. இயேசு அவனைப் பார்த்து, மூன்று முக்கியமான காரியங்களைச் சொன்னார். முதலாவது, பயப்படாதே, இரண்டாவது, விசுவாசமுள்ளவனாயிரு, மூன்றாவது, அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். கிறிஸ்துவினுடைய இந்த வார்த்தைகள், அவனுடைய உள்ளத்தில், நம்பிக்கை நட்சத்திரமாய் பிரகாசித்தது. “கர்த்தர் ஒரு அற்புதம் செய்வார்” என்ற நம்பிக்கையின் துளிர் துளிர்த்தது.
சில வேளைகளில், டாக்டர்கள் வயிற்றிலேயிருக்கிற கட்டி, கேன்சருக்கு ஏதுவானது, என்று சொல்வார்களானால், உடனே மனக்கலக்கம் வந்துவிடும். சாத்தான் அதைப் பற்றிப்பிடித்து பெரிதாக்கி, பயத்தைக் கொண்டுவந்துவிடுவான். சந்தேகப்படுகிறவர்களுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய முடியாது. அப். யாக்கோபு சொல்லுகிறார், “சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு, அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” (யாக். 1:6).
கிறிஸ்துவின் வார்த்தைகள், யவீருவைத் திடப்படுத்தின. அந்த மரித்துப்போன பிள்ளையின் கையைப் பிடித்து: “பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்” (லூக். 8:55,55).
எந்த சூழ்நிலையிலும், மனம் சோர்ந்துபோகவிடாதிருங்கள். எந்த பிரச்சனை யையும், விசுவாசத்தோடும், கிறிஸ்துவோடும், அணுகுங்கள். என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையிலிருந்து, எனக்கு விடுதலை தருவார். இயேசு கிறிஸ்துவின்மேல் இறங்கின, உயிர்த்தெழுந்த வல்லமை, என் மேலும் இறங்கட்டும். கர்த்தர் என்னைக் குணமாக்குவார், என்று விசுவாசியுங்கள். விசுவாசம் என்பது பார்க்கக்கூடாதவைகளைப் பார்க்கக்கூடும். இல்லாதவைகளை இருக்கிறவைகள்போல எண்ணும். அதரிசனமானவைகளை தரிசிக்கும். முடிவில் உங்களுக்கு ஜெயத்தைக் கொண்டு வரும். ஆரோக்கியத்தைத் தரும்.

நினைவிற்கு:- “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற் காக, நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” (யூதா. 1:3).