விசுவாச அறிக்கை!

“அதினாலே நாம் தைரியங்கொண்டு, கர்த்தர் எனக்குச் சகாயர். நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே” (எபி. 13:6).

இரண்டு வித அறிக்கைகள் உண்டு. ஒன்று, விசுவாச அறிக்கை. அடுத்தது, பாவ அறிக்கை. பாவ அறிக்கையைக் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிலர் ஒவ்வொரு வாரமும், செய்த பாவங்களையே திரும்ப செய்துவிட்டு, நாங்கள் செய்யத்தக்கவைகளை செய்யாமல், செய்யத்தகாதவைகளை செய்து வந்தோம், என்று அறிக்கையிடுகிறார்கள்.
அதை உணர்ந்து, பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டு, இனி அப்படிப்பட்ட பாவத்தை செய்யமாட்டேன் என்று தீர்மானித்து, உறுதியோடு அறிக்கை செய்ய வேண்டும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). “தன் பாவங் களை மறைக்கிறவன், வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டு விடுகிறவனோ, இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).
இன்னொரு அறிக்கை உண்டு. அது, “கர்த்தரே தெய்வம்” என்று அறிக்கை யிடுவதாகும். அவர்தான் ஜீவனுள்ளவர். அவர்தான் சாத்தானுடைய பிடியிலிருந்து என்னை விடுவித்தவர். அவர்தான் இரட்சிப்பை அருளுகிறவர் என்பதை வாயினால் அறிக்கையிட வேண்டும். இயேசு சொன்னார், “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற, என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்” (மத். 10:32). அநேகர், இரகசியமாய் இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று, முப்பது வருடங்களாக, சொல்லி பழைய மார்க்கத்தின் ஆசீர்வாதங்களையும், கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களையும், பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் தேவனை ஏமாற்றுகிறவர்கள்.
யோவானிடம் ஞானஸ்நானம் பெற வந்தவர்கள், தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். யோவான்ஸ்நானன், “நான் கிறிஸ்து அல்ல” என்று அறிக்கையிட்டார் (யோவா. 1:20). “விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி, அறிக்கையிட்டார்கள்” (அப். 19:18).
மூன்றாவது, இன்னொரு அறிக்கையுண்டு. அதுதான் விசுவாச அறிக்கை. நீங்கள் நம்புகிற தேவன் யார்? அவர் உங்களுக்கு என்ன செய்ய வல்லவர்? என்பதை அறிக்கையிடுதல். வேத வசனங்களையும், வாக்குத்தத்தங்களையும் அறிக்கையிடுதல். அவர் சொல்லியிருக்கிறார், ஆகவே நிச்சயமாய் செய்வார் என்று நம்பிக்கையோடு சொல்லுவது. எபி. 13-ம் அதிகாரத்திலே, “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு கர்த்தர் எனக்குச் சகாயர். நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே” (எபி. 13:5,6). சுருக்கமாக, “அவர் சொல்லியிருக்கிறாரே. ஆகவே நாம் சொல்லலாமே.”
விசுவாசத்தை அறிக்கையிட, அறிக்கையிட, உங்களுடைய விசுவாசம் பெலன் கொள்ளும். சோதனை நேரத்தில், போராட்ட நேரத்தில், சாத்தானும்கூட கேட்கும்படி, வேத வசனங்களை, வாக்குத்தத்தங்களை, வாய்திறந்து சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள், உள்ளான மனுஷனிலே பெலன் கொள்வீர்கள். தைரியங்கொள்வீர்கள். கர்த்தர்மேல் நம்பிக்கை வைப்பீர்கள். கர்த்தரோ, “நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது” என்று சொல்லுவார்.

நினைவிற்கு:- “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக் கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்” (மத். 15:28).