விசுவாசத்தினாலே பிழைப்பு!

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோம. 1:17).

விசுவாசமிருந்தால், நிச்சயமாகவே பிழைப்பு உண்டு. “நீதிமான், ஒருவேளை பிழைப்பான்” என்று வேதம் சொல்லவில்லை. அவன் கட்டாயம் பிழைப்பான், என்றே உறுதி செய்கிறது. ஆகவே, வேதத்தில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்பது, நான்கு இடங்களில் வருகின்றன (ஆபகூக். 2:4, ரோம. 1:17, கலா. 3:11, எபி. 10:38). “உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவா. 16:33). “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்று இயேசு கிறிஸ்து தாமே சொன்னார் (யோவா. 14:19). ஆம், நீதிமான் பிழைப்பான்.

உலகத்தார், நாளைக்காக கவலைப்படுகிறார்கள். வருங்காலம் எப்படி இருக்குமோ? நானும், என்னுடைய பிள்ளைகளும், எப்படி பிழைப்போம் என்று கவலைப்படுகிறார்கள். “என்னத்தை உண்போம். என்னத்தை உடுப்போம்” என்பதே, அவர்களுடைய பிரச்சனையாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து சொன்னார், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை. அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. அவைகளையும், உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித் தவர்கள் அல்லவா?” (மத். 6:26).

உணவு, உடை, வேலையைப் பார்க்கிலும், அதிகமாய் உங்களுக்கு தேவை விசுவாசமே. “கர்த்தர் என்னை நடத்துவார்,” என்கிற விசுவாசம். என்னை ஐசுவரிய வானாக்கவே, அவர் தரித்திரரானார். என் நோய்களைக் குணமாக்கவே, அவருடைய சரீரத்தில் தழும்புகளை ஏற்றுக்கொண்டார். என் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றவே, அவர் துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்” என்று திரும்பத் திரும்ப விசுவாசத்தோடு அறிக்கை செய்யுங்கள். “விசுவாசிக்கிறவன் பதறான்,” (ஏசா. 28:14). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33).

மார்ட்டின் லூத்தருக்கு, எத்தனையோ போராட்டங்கள். பிரச்சனைகள் இருந்தது. அன்றைக்கிருந்த அரசாங்கம், அவரைக் கொலை செய்ய போர்வீரர்களை தேசம் எங்கும் அனுப்பித் தேடினது. மார்ட்டின் லூத்தர், முழங்கிச் சொன்ன வார்த்தை என்ன? “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்பதே. அவரை எந்த வீரனாலும் கைது செய்ய முடியவில்லை.

எந்த ராஜாவாலும், மரண தீர்ப்பளிக்க முடியவில்லை. சாறிபாத் விதவைக்கு, உயிர் வாழ எந்த வழியுமில்லை. பானையில் கொஞ்சம் மாவும், கலசத்தில் கொஞ்சம் எண்ணையும் மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு நானும், என்னுடைய மகனும், அப்பம் சுட்டு புசித்து விட்டு மரித்து விடலாம் என்று எண்ணியிருக்கிறோம், என்றாள் துக்கத்தோடே! ஆனால், எலியா மூலமாக விசுவாசத்தை கர்த்தர் அவளுக்குள் கொண்டு வந்தார். முதல் அடையை பண்ணி, எலியாவுக்கு அவள் கொடுத்ததினிமித்தம், பானையிலிருந்த மா குறையவுமில்லை. கலசத்திலுள்ள எண்ணெய் தீர்ந்து போகவுமில்லை. பஞ்ச காலமெல்லாம் அது வளர்ந்துகொண்டே வந்தது.

தேவபிள்ளைகளே, அவர் ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த தேவன், அல்லவா? காகங்களைக் கொண்டு எலியாவுக்கு ஒவ்வொருநாளும் உணவை கொடுத்தவர் அல்லவா? நிச்சயமாகவே, உங்களுக்கு பிழைப்பு உண்டுபண்ணுவார்.

நினைவிற்கு:- “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22).