விசுவாசத்தினால் பரிசுத்தம்!

“விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர் களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்” (அப். 15:9).

“பரிசுத்த ஜீவியம்,” என்பது சாதாரணமானது அல்ல. காரணம், இந்த உலகத்தை அசுத்த ஆவிகள் ஆளுகின்றன. இந்த உலகம் பொல்லாங்கனுக்குள்ளும், அவனுடைய ஆளுகைக்குள்ளும் கிடக்கின்றன. உலக ஜனங்களும் பாவ இச்சை களுக்கு அடிமையாகி, சொல்லிலும், செயலிலும், பார்வையிலும் அசுத்தத்தைப் பரப்புகிறார்கள். அசுத்தமான சினிமாக்கள், அசுத்தமான டி.வி. நிகழ்ச்சிகள் பாவத்துக்குள்ளும், பாதாளத்துக்குள்ளும் இழுக்கக்கூடிய சத்துருவினுடைய வல்லமைகள் இந்த உலகத்தில் கிரியைச் செய்கின்றன.

பூமியில் வாழுகிற சிலருக்கு, மரணத்துக்கு அப்பால் ஒரு வாழ்க்கையிருக்கிறது. பரிசுத்தமாய் ஜீவித்தால்தான், தெய்வத்தினுடைய சந்நிதானத்திற்குப் போக முடியும். பாதாளத்துக்கும், அக்கினிக் கடலுக்கும் தப்ப முடியும், என்ற எண்ணம் இல்லாதிருக்கிறது. மற்றவர்களெல்லாம், “கண்டதே காட்சி, கொண்டதே கோலம். உலகத்தை நன்றாய் அனுபவிப்பதே தவிர வேறு தத்துவங்கள் ஒன்றுமில்லை” என்று ஓடுகிறார்கள். விசுவாசத்தினால் மட்டும்தான், நம்முடைய பரிசுத்தத்தைப் பாதுகாக்க முடியும். பரிசுத்தத்தை நிலைநிறுத்த முடியும்.

கடைசி வரை பரிசுத்தத்தோடு வாழ்ந்து, ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடிக்க முடியும். “பரிசுத்தம்” என்பது ஒரு கூட்டு முயற்சி. மனுஷனும், கர்த்தரும் இணைந்து மேற்கொள்ளுகிற முயற்சிதான், “பரிசுத்த முயற்சி” என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய உள்ளத்தில் பரிசுத்தத்துக்கான தாகமும், வாஞ்சையும் அவசியம். கர்த்தருடைய பட்சத்தில், அவர் உங்கள் கைகளைப் பிடித்து, பரிசுத்த பாதையிலே வெற்றியின் பாதையிலே அருமையாய் நடத்த வேண்டும். ஒரு தென்னை மரம் வளர்க்க ஆசைப்படுகிறீர்கள். முதலில் தென்னை கன்று நடுவதற்கு மூன்று அடி நீளம், மூன்று அடி அகலத்தில் ஆழமான குழியைத் தோண்ட வேண்டும். அதிலே செம்மண் உரம் போட்டு, நல்ல தென்னை விதையை நட்டு, போதுமான தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இவ்வளவும் நீங்கள் செய்ய வேண்டிய கடமை. இதற்குப் பிறகு கர்த்தர் என்ன செய்கிறார்? அந்த தென்னை விதையின் ஜீவனைத் தட்டியெழுப்புகிறார். வேர்கள் ஆழமாய்ப் போய், பூமியிலுள்ள தண்ணீரை உறிஞ்சுகிறது. அப்பொழுது மேலே தென்னங்குருத்து வளருகிறது. பின் இலைகள் வருகின்றன. இது கர்த்தர் செய்ய வேண்டிய செயல்.

விசுவாசத்தினாலே நீங்கள் பரிசுத்தத்தை பெற விரும்பினால், முதலாவது பரிசுத்தமுள்ள தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் பரிசுத்தமுள்ள தேவன் மட்டுமல்ல, பரிசுத்தத்தை கிருபையாய் தந்தருளுகிறவரும்கூட. அவருடைய நாமம், “யெகோவா மெக்காதீஸ்” என்று அழைக்கப்படுகிறது. அதற்கு, “உங்களை பரிசுத்தப்படுத்துகிற தேவன் நானே” என்பது அர்த்தம்.

இந்த பரிசுத்தம், முதலிலே எங்கு ஆரம்பிக்கிறது? விசுவாசத்தோடு கல்வாரிச் சிலுவையண்டை வாருங்கள். இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, என்னுடைய பாவங்களினிமித்தமாக அல்லவா நீர் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இரத்தத்தை சிந்தியிருக்கிறீர் என்று விசுவாசியுங்கள். கிறிஸ்துவின் இரத்தம், உங்களை கழுவி சுத்திகரித்து மீட்டெடுக்கக்கூடியது. பிறகு பரிசுத்தமுள்ள வேத வாசிப்பு, பரிசுத்தமுள்ள சபைக்கூடுதல், ஜெபம், ஆவியானவர் என்று சொல்லி முடிவில் பரிசுத்தத்திலே பூரணப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17).