வரமாகிய விசுவாசம்!

“வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்” (1 கொரி. 12:9).

ஆவியின் வரங்களிலே ஒன்று விசுவாச வரம். மூன்று வரங்களை நாம் வல்லமையின் வரங்கள் என்று அழைக்கிறோம். அதிலே முதலாவது, விசுவாச வரம். இரண்டாவதாக, சுகமளிக்கிற வரம். மூன்றாவதாக, அற்புதங்கள் செய்கிற வரம். மனுஷருக்குரிய விசுவாசமுமுண்டு. தெய்வீகத்துக்குரிய விசுவாசமுமுண்டு.

இந்த வரம், தெய்வீகத்தின் ஒரு பகுதியான பரிசுத்த விசுவாசமாயிருக்கிறது. கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவருக்குள் எப்போதும் மாபெரும் விசுவாசம் தளும்பிக்கொண்டேயிருக்கிறது. அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் தோல்வியைக் குறித்து எண்ணுவதேயில்லை. அவர் விசுவாசத்தை பயன்படுத்தி, உலகங்களை சிருஷ்டித்தார் (எபி. 1:3). ஆண்டவர் தாமே விசுவாச வரத்தின், வல்லமைக்கு ஊற்றுக்காரணர். இந்த தெய்வீகமான சுகத்தை, கர்த்தர் தமது ஆவியின் வரங்கள் மூலமாக, உங்களுக்குத் தர விரும்புகிறார். “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு, எல்லாம் கூடும்” (மாற். 9:23). “நீ விசுவாசித் தால், தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவான் 11:40).

“கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல, அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு (மத். 17:20). போதகர் பால் யாங்கி சோ சொல்லுகிறார், அவர் அதிகாலையில் எழும்பி ஜெபித்து கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை தியானிக்க தியானிக்க விசுவாச வரம் அவரை நிரப்பும். அப்பொழுது அவர் தன்னால் சாதாரணமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத, பெரிய பெரிய திட்டங்களை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவாராம்.

திடீரென்று ஒரு நாள் கர்த்தர் அவரிடம், “நீ ஒரு பெரிய கிறிஸ்தவ நியூஸ் பேப்பர் ஒன்றை, கொரியாவில் ஆரம்பிக்க வேண்டுமென்று சொன்னார்.” அது அவருக்கு பெரிய அதிர்ச்சியாயிருந்தது. “ஆண்டவரே, இது என்னால் முடியாது என்று சொன்னார். அப்பொழுது கர்த்தர், உனக்கு முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே, பரிசுத்த ஆவியானவரில் சார்ந்துகொள். அப்பொழுது விசுவாச வரம் உன்னிலே செயல்படும். நான் அற்புதத்தின்மேல் அற்புதம், செய்து கொண்டே இருப்பேன் என்றார். அவருடைய சபையில் மூப்பர்கள், அது, “பயித்தியக்காரத் திட்டம்,” என்றே எண்ணினார்கள். சிலர் அந்த திட்டத்தைப் பார்த்து, சபையை விட்டே இடறிப்போனார்கள்.

ஆனால் பால் யாங்கி சோ மேல், அந்த விசுவாச வரம் இருந்ததினாலே, என் தேவன் இதை செய்ய வல்லவர். என் தேவன் பெரியவர். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர். இருளிலிருந்து வெளிச்சத்தை உண் டாக்குகிறவர் என்றெல்லாம் விசுவாச அறிக்கை செய்து, கர்த்தரிலே சார்ந்துகொண்டார். அப்படியே சில மாதங்களுக்குள்ளாக, “பத்திரிகை,” வெளிவந்தது. அதில் கிறிஸ்தவ செய்திகளை, பாதிக்குப் பாதி அவர் வெளியிட்டு வருகிறார். தேவ பிள்ளைகளே, நீங்களும் விசுவாச வரத்தை செயல்படுத்தலாம். இன்றைக்கு கர்த்தரை, சர்வவல்லவராய் காணுங்கள். மிகப்பெரியவராய் காணுங்கள். சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிப்புக் கர்த்தராய் காணுங்கள். மட்டுமல்ல, முற்றிலும் அவரையே விசுவாசத்தில் சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவா. 14:12).